சேசிங் செய்ய களம் இறங்கும் போது அந்த முடிவோட தான் நானும் குர்பாஸும் இறங்கினோம் - இப்ராகிம் ஜட்ரான்
உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைப்பெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.
சென்னை,
உலகக்கோப்பை தொடரில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 282 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 283 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் 49 ஓவர்களில் 286 ரன் எடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக பேட்டிங் ஆடிய இப்ராகிம் ஜட்ரானுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து வெற்றி குறித்து அவர் பேசியதாவது,
நாங்கள் இந்த போட்டியில் சேசிங் செய்ய களமிறங்கும் போது பாசிட்டிவான இன்டெட்டுடன் தான் உள்ளே களமிறங்கினோம். நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பு என்னிடமும் குர்பாஸிடமும் இருந்தது. நாங்கள் நிறைய கிரிக்கெட்டை ஒன்றாக விளையாடியுள்ளோம்.
16 வயது முதல் ஒன்றாக விளையாடி வருகிறோம் எனவே எங்களுக்குள்ளான பிணைப்பு மிக உறுதியாக இருந்தது. இந்த போட்டியில் நாங்கள் இருவரும் அமைத்த பார்ட்னர்ஷிப் எங்களது அணியின் வெற்றிக்கு உதவியதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றி உண்மையிலேயே எனக்கும் எங்களது நாட்டிற்கும் ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது இவ்வாறு அவர் பேசினார்.