இஷான் கிஷன், சூர்யகுமார் அதிரடி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி திரில் வெற்றி ..!!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

Update: 2023-11-23 17:17 GMT

விசாகப்பட்டினம்,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த நிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

அதன்படி, விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்துவீச்சை தேர்வுசெய்தார். இதனை தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்டீவ் ஸ்மித்தும், மேத்யூ ஷார்ட்டும் களமிறங்கினர். இந்த ஜோடியில் ஷார்ட் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஜோஸ் இங்கிலிஸ், இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பவுண்டரிக்கு விரட்டினார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த ஸ்டீவ் ஸ்மித், அரைசதம் கடந்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிவந்த இங்கிலிஸ், 47 பந்துகளில் 9 பவுண்டரி, 8 சிக்சருடன் சதம் அடித்து அசத்தினார். அவர் 110 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் ஜெய்ஸ்வால் மற்றும் கெய்க்வாட் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் கெய்க்வாட் (0) ரன் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அவரைத்தொடர்ந்து ஜெய்ஸ்வால் 21 ரன்களில் கேட்ச் ஆனார்.

அடுத்ததாக இஷான் கிஷன் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. தொடர்ந்து அதிரடி காட்டி வந்த இஷான் கிஷன் தனது அரை சதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா 12 ரன்களில் கேட்ச் ஆனார். மறுமுனையில் அதிரடி காட்டிவந்த சூர்யகுமார் யாதவ் 42 பந்துகளில் 4 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 80 ரன்களில் கேட்ச் ஆனார். கடைசி ஓவரில் 3 பந்துகளில் வெற்றிபெற 2 ரன்கள் தேவைப்பட்டநிலையில் அக்சர் பட்டேல் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பிஸ்னோய், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ரன் அவுட் ஆக ஆட்டத்தின் இறுதியில் பதற்றம் நிலவியது.

இறுதியில் அதிரடி காட்டிய ரிங்கு சிங் 22 (14) ரன்களும், முகேஷ் (0) ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியின் சார்பில் அதிகபட்சமாக தன்வீர் சங்கா 2 விக்கெட்டுகளும், அபோர்ட், பெண்ட்ராப் மற்றும் ஷாட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இதனைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற புள்ளிகணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்