இரானி கோப்பை கிரிக்கெட்: மத்திய பிரதேச அணிக்கு 437 ரன்கள் இலக்கு

ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் மத்திய பிரதேச அணிக்கு 437 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

Update: 2023-03-04 22:13 GMT

Image Courtesy : @BCCIdomestic twitter

குவாலியர்,

2021-22-ம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை சாம்பியன் மத்திய பிரதேசம்-இதர இந்தியா (ரெஸ்ட் ஆப் இந்தியா) அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் நடந்து வருகிறது.

இதில் முதல் இன்னிங்சில் முறையே ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 484 ரன்னும், மத்திய பிரதேச அணி 294 ரன்னும் எடுத்தன. பின்னர் 190 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 3-வது நாள் முடிவில் 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்து இருந்தது. அபிமன்யு ஈஸ்வரன் 26 ரன்னுடனும், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய அபிமன்யு ஈஸ்வரன் 28 ரன்னில் அவேஷ் கான் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து வந்த பாபா இந்திரஜித், யாஷ் துல் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் நடையை கட்டி ஏமாற்றம் அளித்தனர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று வேகமாக மட்டையை சுழற்றிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 103 பந்துகளில் சதத்தை எட்டினார். அவர் முதல் இன்னிங்சில் இரட்டை சதம் (213 ரன்கள்) விளாசி இருந்தார். இதன் மூலம் ஒரு இரானி கோப்பை போட்டியில் இரட்டை சதம் மற்றும் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்தார். அத்துடன் முதல்தர போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்திய 12-வது இந்தியர் என்ற பெருமையை தனதாக்கினார்.

அணியை வலுவான நிலைக்கு உயர்த்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 144 ரன்னில் (157 பந்து, 16 பவுண்டரி, 3 சிக்சர்) சரன்ஷ் ஜெயின் சுழற்பந்து வீச்சில் போல்டு ஆகி பெவிலியன் திரும்பினார். ஜெய்ஸ்வால் இரு இன்னிங்சிலும் சேர்த்து 357 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் ஒரு இரானி கோப்பை போட்டியில் அதிக ரன் குவித்தவரான ஷிகர் தவானின் (332 ரன்கள், 2012-13-ம் ஆண்டு) சாதனையை ஜெய்ஸ்வால் முறியடித்தார்.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 71.3 ஓவர்களில் 246 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. புல்கித் நரங் 15 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். மத்திய பிரதேச அணி தரப்பில் அவேஷ் கான், அங்கித் குஷ்வாக், சரன்ஷ் ஜெயின், சுப்ஹம் ஷர்மா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து மத்திய பிரதேச அணிக்கு 437 ரன்களை வெற்றி இலக்காக ரெஸ்ட் ஆப் இந்தியா நிர்ணயித்தது. இந்த இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய மத்திய பிரதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் அர்ஹாம் அகில் ரன் எதுவும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே முகேஷ் குமார் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த சுப்ஹம் ஷர்மா 13 ரன்னில் சவுரப் குமார் பந்து வீச்சில் போல்டு ஆனார். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் மத்திய பிரதேச அணி 29 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹிமான்ஷூ மந்திரி 51 ரன்களுடனும், ஹர்ஷ் காவ்லி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. மத்திய பிரதேச அணியின் வெற்றிக்கு மேலும் 356 ரன்கள் தேவைப்படுகிறது. அந்த அணி கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ளது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் கடைசி நாள் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்த போட்டியில் ரெஸ்ட் ஆப் இந்தியாவுக்கு பிரகாசமாக வெற்றி வாய்ப்பு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்