ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 'பிளே-ஆப் ' சுற்றில் நுழையப்போவது யார்?
ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத அணிகளில் ஒன்றான பெங்களூரு அணியும் பிளே-ஆப் சுற்றுக்காக போராடுகிறது.
சென்னை,
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கத்திற்கு மாறாக இந்த முறை நீயா-நானா? குடுமிபிடி கடுமையாக உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சீசனில் 29 தடவை 200 ரன்னுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளன. 6 முறை 200 ரன்னுக்கு மேலான இலக்கு விரட்டிப்பிடிக்கப்பட்டு இருக்கிறது. தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் விதிமுறையும் (இம்பாக்ட் வீரர்) இதற்கு ஒரு காரணம். இதனால் யார்-யார் பிளே-ஆப் சுற்றை எட்டுவார்கள் என்பதை கணிப்பதிலும் இடியாப்ப சிக்கல் நிலவுகிறது.
புள்ளிப்பட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெறும். இதுவரை 53 லீக் ஆட்டங்கள் நடந்து விட்டன. இன்னும் 17 லீக் மட்டுமே மிஞ்சியுள்ள நிலையில் இன்னும் எந்த அணியும் 'பிளே-ஆப்' சுற்றுக்குள் கால்பதிக்கவில்லை. பிளே-ஆப் வாய்ப்பை உறுதி செய்வதற்கு குறைந்தது 9 வெற்றி தேவையாகும். கடந்த ஆண்டு தொடரை பார்த்தால் 4-வது இடத்தை பிடித்த பெங்களூரு அணி 8 வெற்றிகளுடன் உள்ளே நுழைந்திருந்தது. இனி இந்த சீசனில் ஒவ்வொரு அணிக்கும் வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
குஜராத் டைட்டன்ஸ் (16 புள்ளி): ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் அணி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 'பிளே-ஆப்' சுற்றை நெருங்கி விட்டது. எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் (மும்பை, ஐதராபாத், பெங்களூருவுக்கு எதிராக) ஒன்றில் வென்றால் போதும். ஒரு வேளை மூன்றிலும் தோற்றால் கூட ரன்ரேட்டில் பின்தங்காமல் இருந்தால் போதும். பந்து வீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் குஜராத் அசுர பலத்துடன் திகழ்வதால் பெரும்பாலும் அந்த அணிக்கு தடங்கல் இருக்காது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (13 புள்ளி): டோனி தலைமையிலான முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 வெற்றி, 4 தோல்வி ஒரு முடிவில்லை என்று 13 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கிறது. சென்னை அணிக்கு மீதமுள்ள 3 ஆட்டங்களில் (கொல்கத்தா, டெல்லிக்கு எதிராக இரு முறை) 2-ல் வெற்றி தேவை. குறைந்தது ஒன்றிலாவது வெற்றி பெற்றாக வேண்டும்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: இதுவரை 11 ஆட்டங்களில் ஆடியுள்ள லக்னோ 5 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 11 புள்ளிகளுடன் இருக்கிறது. கேப்டன் லோகேஷ் ராகுல் காயத்தால் விலகியிருப்பது பாதகமான விஷயமாகும். இன்னும் ஐதராபாத், மும்பை, கொல்கத்தா ஆகிய அணிகளுடன் மோத உள்ள லக்னோ மூன்றிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் பரிதவிக்கிறது. ஒன்றில் தோற்று, 2-ல் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டி இருக்கும்.
ராஜஸ்தான் ராயல்ஸ்: தனது முதல் 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்று அசத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அடுத்த 6 ஆட்டங்களில் 5-ல் சறுக்கியதால் இப்போது 10 புள்ளிகளுடன் நெருக்கடி வளையத்தில் சிக்கியுள்ளது. எஞ்சிய 3 ஆட்டங்களிலும் (கொல்கத்தா, பெங்களூரு, பஞ்சாப்புக்கு எதிராக) ஜெயிக்க வேண்டிய நிலையில் இருப்பதால் அவர்களின் வாய்ப்பு கடினமாகியுள்ளது.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்: இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத அணிகளில் ஒன்றான பெங்களூரு அணியும் பிளே-ஆப் சுற்றுக்காக போராடுகிறது. 10 புள்ளிகளுடன் (5 வெற்றி, 5 தோல்வி) உள்ள பெங்களூரு அணி எஞ்சிய 4 ஆட்டங்களில் (மும்பை, ராஜஸ்தான், ஐதராபாத், குஜராத்துக்கு எதிராக) 3-ல் வெற்றி பெற வேண்டியது முக்கியமானது. அந்த அணி ரன்ரேட்டை உயர்த்துவதும் அவசியமாகும்.
மும்பை இந்தியன்ஸ்: 10 புள்ளிகளுடன் உள்ள 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இன்னும் பெங்களூரு, குஜராத், லக்னோ, ஐதராபாத் அணிகளுடன் மல்லுக்கட்ட வேண்டி இருக்கிறது. ரன்ரேட் மோசமாக இருப்பதால் எஞ்சிய அனைத்து ஆட்டத்திலும் வென்றால் பிரச்சினை இருக்காது. குறைந்தது 3-ல் வாகை சூட வேண்டும்.
பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியின் நிலைமையும் இது தான். எஞ்சிய அனைத்து ஆட்டங்களிலும் வென்றால் பிளே-ஆப் சுற்றை பற்றி நினைத்து பார்க்கலாம்.
புள்ளி பட்டியலில் பின்தங்கியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளை பொறுத்தவரை ஓரளவு வாய்ப்பில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த அணிகள் தங்களது கடைசி கட்ட ஆட்டங்களில் வெற்றி கண்டு, மற்ற போட்டிகளின் முடிவுகளும் இணக்கமாக அமைந்தால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம்.