ஐ.பி.எல்; பதிரனா உடற்தகுதியை எட்டிவிட்டாரா ...? - மேனேஜர் கொடுத்த அப்டேட்

இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

Update: 2024-03-22 11:24 GMT

image courtesy: IPL twitter / @akalugalage

மும்பை,

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே 26-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் ஐ.பி.எல் துவங்கப்பட்டது முதல் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த எம்.எஸ்.தோனி நடப்பு ஐ.பி.எல் தொடரில் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக இந்திய இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நடப்பு ஐ.பி.எல் தொடரில் தோனி ஒரு சாதாரண வீரராக விளையாட உள்ளார்.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து காயம் காரணமாக நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே விலகி உள்ளார். மேலும், வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியின் போது இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா கிரேட் ஒன் தசைப்பிடிப்பு காயத்தை சந்தித்ததால் அவரும் ஐ.பி.எல் தொடரின் தொடக்க ஆட்டங்களை தவறவிடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை அணியில் டெவான் கான்வே விலகியதை அடுத்து, ஐ.பி.எல் தொடரின் தொடக்க ஆட்டங்களில் பதிரனா விளையாடுவதும் சந்தேகம் என்று வெளியான தகவலை அடுத்து சென்னை ரசிகர்கள் மிகுந்த கவலை அடைந்தனர். இந்நிலையில், ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்கு பதிரனா பிட்டாக உள்ளதாக அவருடைய மேனேஜர் அமிலா கலுகலேகே கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பதிரனா எங்கே என்ற கேள்விக்கு பதில் இது தான். பிட்டாகியுள்ள அவர் இடியைப் போன்ற பந்துகளை வீசுவதற்கு தயாராகியுள்ளார். அவரை எதிர்கொள்ள தயாராக இருங்கள். ஒரு வழியாக நாங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டோம் என அவருடன் எடுத்த புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு சிஎஸ்கே ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்