ஐபிஎல்: கொல்கத்தாவை போராடி வீழ்த்தி டெல்லி அணி முதல் வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் எளிய இலக்கையும் டெல்லி அணி போராடி எடுத்து ஒரு வழியாக முதல் வெற்றியை சுவைத்தது.

Update: 2023-04-20 23:11 GMT

புதுடெல்லி,

மழையால் பாதிப்பு

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு டெல்லியில் அரங்கேறிய 28-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சுடன் மோதியது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மழை புகுந்து விளையாடியதால் ஒரு மணி நேரம் தாமதம் ஆனது. ஆனாலும் ஓவர்கள் குறைக்கப்படவில்லை. 'டாஸ்' ஜெயித்த டெல்லி கேப்டன் வார்னர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். டெல்லி அணியில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா சேர்க்கப்பட்டார். 2021-ம் ஆண்டுக்கு பிறகு அவர் ஆடும் முதல் ஐ.பி.எல். இது தான்.

ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் எதிர்பார்த்தபடியே வேகப்பந்து வீச்சு ஈடுபட்டது. இதனால், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா வீரர்கள் தகிடுதத்தம் போட்டனர். லிட்டான் தாஸ் (4 ரன்), வெங்கடேஷ் அய்யர் (0), கேப்டன் நிதிஷ் ராணா (4 ரன்) வரிசையாக வேகப்பந்து வீச்சுக்கு இரையானார்கள். மிடில் வரிசையில் சுழற்பந்து வீச்சாளர்கள் அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் கைவரிசை காட்ட கொல்கத்தா அணி தடம்புரண்டது. ரிங்கு சிங்கும் (6 ரன்) நிலைக்கவில்லை. இந்த விக்கெட் அணி வகுப்புக்கு மத்தியில் தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் 43 ரன்கள் (39 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார்.

கொல்கத்தா 127 ரன்

பின்வரிசையில் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செலின் பங்களிப்பு அணி மூன்று இலக்கத்தை கடக்க உதவியது. முகேஷ்குமாரின் கடைசி ஓவரில் ரஸ்செல் 'ஹாட்ரிக்' சிக்சர் விரட்டி ஆறுதல் அளித்தார். 20 ஓவர்களில் கொல்கத்தா 127 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. நடப்பு தொடரில் கொல்கத்தாவின் மோசமான ஸ்கோர் இதுவாகும். ரஸ்செல் 38 ரன்களுடன் ( 31 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தார். எக்ஸ்டிரா வகையில் அந்த அணிக்கு 11 வைடு உள்பட 12 ரன்கள் கிடைத்தது. டெல்லி தரப்பில் அன்ரிச் நோர்டியா, இஷாந்த் ஷர்மா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அரைசதம் அடித்தும் நெருக்கடி

பின்னர் 128 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு கேப்டன் டேவிட் வார்னர் அருமையான தொடக்கம் தந்தார். சுனில் நரினின் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகள் சாத்தினார். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா 13 ரன்னிலும், அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 2 ரன்னிலும், பில் சால்ட் 5 ரன்னிலும் சுழல்வலையில் சிக்கி சிதறினர்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தனது 59-வது அரைசதத்தை எட்டிய வார்னர் 57 ரன்களில் (41 பந்து, 11 பவுண்டரி) சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. தொடர்ந்து மனிஷ் பாண்டே 21 ரன்னிலும், அமன்கான் ரன் ஏதுமின்றியும் நடையை கட்டினர்.

கடைசி ஓவரில் முடிவு

இடைவிடாது 4 சுழற்பந்து வீச்சாளர்கள் கொடுத்த குடைச்சலில் எளிய இலக்கை அடைவதற்கும் டெல்லி பெரும்பாடுபட வேண்டியதானது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. இறுதி ஓவரை இடக்கை மிதவேகப்பந்து வீச்சாளர் கெஜ்ரோலியா வீசினார். இதில் முதல் பந்தில் 2 ரன்னும், அடுத்த பந்தில் 2 ரன்னும் அக்ஷர் பட்டேல் எடுத்தார். 2-வது பந்து நோ-பாலாக வீசப்பட்டதால் எக்ஸ்டிரா வகையில் ஒரு ரன் கிடைத்ததுடன், மீண்டும் 2-வது பந்து வீசப்பட்டது. அதில் அக்ஷர் வெற்றிக்குரிய 2 ரன் எடுத்து முடித்து வைத்தார்.

டெல்லி அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அக்ஷர் பட்டேல் 19 ரன்னுடனும், லலித் யாதவ் 4 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

6-வது லீக்கில் ஆடிய டெல்லிக்கு இது முதலாவது வெற்றியாகும். கொல்கத்தாவுக்கு விழுந்த 4-வது அடியாகும்.

 

Tags:    

மேலும் செய்திகள்