ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான்-பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் அணி, பஞ்சாப்புடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.

Update: 2023-04-04 23:27 GMT

கவுகாத்தி,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் இன்று (புதன்கிழமை) நடக்கும் 8-வது லீக்கில் ராஜஸ்தான் ராயல்சும், பஞ்சாப் கிங்சும் மோதுகின்றன. கவுகாத்தியை மையமாக வைத்து ஐ.பி.எல். அணி இல்லை என்றாலும், இது ராஜஸ்தான் அணிக்குரிய உள்ளூர் ஆட்டமாக பார்க்கப்படுகிறது. எனவே அந்த அணிக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருக்கும்.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் தனது தொடக்க ஆட்டத்தில் 72 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை ஊதித்தள்ளியது. அந்த ஆட்டத்தில் ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால், கேப்டன் சஞ்சு சாம்சன் 3 பேரும் வரிசையாக அரைசதம் அடித்ததுடன், அணியையும் 200-ஐ கடக்க வைத்து அமர்க்களப்படுத்தினர். பேட்டிங் மட்டுமின்றி பந்து வீச்சிலும் மிரட்டிய ராஜஸ்தான், ஐதராபாத்தை 131 ரன்னில் சுருட்டியது.

முதல் ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் 2 விக்கெட் வீழ்த்தியதும், சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை சாய்த்ததும் வெற்றியை சுலபமாக்கின. இவர்களை தவிர அஸ்வின், ஜாசன் ஹோல்டர், தேவ்தத் படிக்கல், ஹெட்மயர் ஆகியோரும் அணிக்கு வலு சேர்க்கிறார்கள். ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த ஜோ ரூட்டுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.

ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் மழை பாதிப்புக்கு இடையே 7 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் கேப்டன் தவான் (40 ரன்), பானுகா ராஜபக்சே (50 ரன்) கணிசமான ரன் எடுத்தனர். சாம் கர்ரன், சிகந்தர் ராசா, ஷாருக்கான் ஆகிய ஆல்-ரவுண்டர்கள் பஞ்சாப்பின் பிம்பமாக திகழ்கிறார்கள். இவர்களுடன் சேர்ந்து பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங், நாதன் எலிஸ், ராகுல் சாஹர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் கிடைத்த வெற்றி உத்வேகத்துடன் மல்லுகட்டுவதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 10-ல் பஞ்சாப்பும், 14-ல் ராஜஸ்தானும் வெற்றி கண்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்