ஐ.பி.எல் கிரிக்கெட்: 56 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி லக்னோ அபார வெற்றி..!

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Update: 2023-04-28 18:15 GMT

image courtesy: IndianPremierLeague twitter

மொஹாலி,

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் கேஎல் ராகுல், கெயில் மெயிஸ் களமிறங்கினர்.

கேஎல் ராகுல் 12 ரன்னில் அவுட் ஆனார். அடுத்துவந்த ஆயிஷ் பதோனியுடன் ஜோடி சேர்ந்த மெயிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மெயிஸ் 24 பந்துகளில் 54 ரன்கள் குவித்து அவுட் ஆனார். பதோனி 24 பந்துகளில் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்கஸ் ஸ்டாயினஸ் 40 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். அடுத்துவந்த நிகோலஸ் பூரன் 19 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார்.

இறுதியில் லக்னோ அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் 2-வது அதிகபட்ச ரன்களை குவித்து லக்னோ சாதனை படைத்துள்ளது. முன்னதாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ரன்கள் குவித்த பட்டியலில் முதல் இடத்தில் பெங்களூரு உள்ளது. 2013-ம் ஆண்டு புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு 263 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 9 ரன்னிலும் கேப்டன் தவான் 1 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். தொடர்ந்து களமிறங்கிய அதர்வா தைடே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அவர் 36 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அடுத்து வந்த சிக்கந்தர் ராசா 36 ரன்களும் லிவிங்ஸ்டன் 23 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். தொடர்ந்து களமிறங்கிய சாம் கர்ரன் 21 ரன்களும் ஜிதேஷ் சர்மா 24 ரன்களும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்த நிலையில் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்கள் எடுத்தது. இதையடுத்து லக்னோ அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்