ஐபிஎல் 2024; குஜராத் அணியில் பாண்ட்யாவின் இடத்தை நிரப்ப அந்த ஆப்கானிஸ்தான் வீரரை வாங்கலாம்- இர்பான் பதான்
ஐபிஎல்-ன் 17-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது.
மும்பை,
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை சமர்பித்தன.
இதனையடுத்து இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் சில முக்கிய வீரர்களை டிரேடிங் முறையில் வாங்கின. குறிப்பாக குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.
கேப்டன், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், வேகப்பந்து வீச்சாளர் என அனைத்து துறைகளிலும் அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தும் ஹர்திக் பாண்ட்யா குஜராத் அணியிலிருந்து வெளியேறியது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை தந்துள்ளது. அவருக்கு பதிலாக சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் ஹர்திக் பாண்ட்யாவின் இடத்தை நிரப்பப்போகும் வீரர் யார்? என்பதே பலரது கேள்வியாக உள்ளது.
இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவின் இடத்தை நிரப்ப ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் அஸ்மத்துல்லா ஓமர்சாயை குஜராத் அணி வாங்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'குஜராத் அணி ஹர்திக் பாண்ட்யாவை இழந்தது மிகப்பெரிய சரிவு . இருப்பினும் அவரது இடத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஆல்ரவுண்டரான அஸ்மத்துல்லா ஓமர்சாய் சரியான வீரராக இருப்பார் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் ஏற்கனவே குஜராத் அணியில் ரஷித் கான் இருப்பதால் சக நாட்டு வீரரிடம் இருந்து சிறந்த செயல்பாட்டை அவரால் பெற்று தரமுடியும். அதேபோன்று குஜராத் அணிக்கு நல்ல வேகப்பந்து வீச்சாளரும் தேவை. அவர்களிடம் தற்போது தேவையான பணமும் இருப்பதால் நல்ல வீரர்களை அவர்கள் தேர்வு செய்ய வேண்டும்' என்று கூறினார்.