சர்வதேச டி20 கிரிக்கெட் - கப்திலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த ரோகித் சர்மா

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்களில் கப்திலை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மா முதலிடத்துக்கு முன்னேறினார்.

Update: 2022-08-29 01:04 GMT

Image Courtesy: AFP

துபாய்,

ஆசிய கோப்பை தொடரின் நேற்று நடந்த 2-வது போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நவாஸ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இந்த 12 ரன்கள் மூலம் சர்வதேச டி-20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்து வீரர் கப்திலை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மா முதலிடத்துக்கு முன்னேறினார்.

ரோகித் இதுவரை 133 டி-20 போட்டிகளில் விளையாடி 4 சதம், 27 அரைசதம் உள்பட 3,499 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த படியாக 3,497 ரன்களுடன் கப்தில் 2-வது இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 3,343 ரன்களுடன் உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்