சர்வதேச டி20 கிரிக்கெட்; விராட் கோலியின் மாபெரும் சாதனையை முறியடித்த பாண்ட்யா

வங்காளதேசத்திற்கு எதிராக நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.;

Update: 2024-10-07 12:21 GMT

image courtesy: AFP

குவாலியர்,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நேற்று தொடங்கியது.

நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய இந்தியா 11.5 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 132 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்தியா தரப்பில் அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா 16 பந்தில் 39 ரன்கள் எடுத்தார். குறிப்பாக தஸ்கின் அகமது வீசிய 12வது ஓவரின் 5வது பந்தில் பாண்ட்யா அதிரடியான சிக்சரை பறக்க விட்டு போட்டியை முடித்தார். இதன் மூலம் பாண்ட்யா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் மாபெரும் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.

அதாவது, நேற்று நடைபெற்ற போட்டியையும் சேர்த்து ஹர்திக் பாண்ட்யா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 5 முறை சிக்சருடன் போட்டியை வெற்றிகரமாக முடித்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை சிக்சருடன் போட்டியை முடித்த இந்திய வீரர் என்ற சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்துள்ளார்.

இதற்கு முன் விராட் கோலி அதிகபட்சமாக 4 போட்டிகளில் சிக்சருடன் பினிஷிங் செய்ததே முந்தைய சாதனையாகும். அவருக்கு அடுத்தபடியாக எம்.எஸ் தோனி மற்றும் ரிஷப் பண்ட் (தலா 3 முறை) ஆகியோர் அந்த பட்டியலில் 3வது இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்