சர்வதேச வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் ஆட உத்தரவு; பி.சி.சி.ஐ. முடிவுக்கு கபில்தேவ் ஆதரவு

சர்வதேச வீரர்கள் தங்களது மாநில அணிக்காக விளையாடுவதை நான் எப்போதும் ஆதரிக்கிறேன்.

Update: 2024-03-01 22:35 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

பி.சி.சி.ஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்கள் தேசிய அணிக்காக விளையாடாத சமயத்தில் ரஞ்சி போன்ற முதல்தர போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் உத்தரவிட்டது. ரஞ்சி போட்டியில் விளையாட மறுத்த நட்சத்திர வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் ஆகியோரை ஒப்பந்தத்தில் இருந்து கிரிக்கெட் வாரியம் நீக்கியது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவை இந்திய முன்னாள் வீரர் கபில்தேவ் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, கிரிக்கெட் வாரியத்தின் இந்த நடவடிக்கையால் சில வீரர்கள் பாதிக்கப்படுவார்கள். இருந்தாலும் தேசத்தை விட யாரும் பெரியவர்கள் அல்ல என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

முதல்தர கிரிக்கெட்டின் அந்தஸ்தை பாதுகாக்கும் வகையில் தேவையான நடவடிக்கையை எடுத்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வாழ்த்துகள். சர்வதேச கிரிக்கெட்டில் வலுவாக காலூன்றிய பிறகு உள்ளூர் போட்டிகளை வீரர்கள் புறக்கணிப்பதை பார்த்து நான் மிகவும் வருத்தம் அடைந்திருக்கிறேன்.

சர்வதேச வீரர்கள் தங்களது மாநில அணிக்காக விளையாடுவதை நான் எப்போதும் ஆதரிக்கிறேன். அவர்கள் விளையாடும் போது, அது உள்ளூர் வீரர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். ஒரு வீரரை உருவாக்குவதில் மாநில கிரிக்கெட் சங்கம் ஆற்றிய சேவைக்கு பிரதிபலன் செலுத்துவதற்கு இது ஒரு சிறந்த வழியாகும்.

கிரிக்கெட் வாரியம் வீரர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதை நம்பி இருக்கும் வீரர்களின் குடும்பத்திற்கு இது உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்