'பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் சாதனை பயணம் முறியடிக்கப்படும்' - பாபர் அசாம்

உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் சாதனை பயணம் முறியடிக்கப்படும் என பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-14 00:50 GMT

ஆமதாபாத்,

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) அரங்கேறுகிறது. இதையொட்டி இரு அணியினரும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்தியாவுடனான ஆட்டம் குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில், 'கடந்த கால முடிவுகளில் நான் கவனம் செலுத்துவதில்லை. இப்போது என்ன செய்ய வேண்டுமோ அதில் மட்டுமே கவனம் இருக்கிறது. சாதனைகள் என்பதே முறியடிக்கப்படக்கூடியது தான். எனவே உலகக் கோப்பை போட்டியில் எங்களுக்கு எதிராக இந்தியாவின் சாதனை பயணம் (7-0) முறியடிக்கப்படும். அது நாளையே (இன்று) நடக்கும் என்று நம்புகிறேன். ஏற்கனவே 2021-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியை தோற்கடித்தோம். அதே போல் இங்கும் செய்வோம் என்று நம்புகிறேன்.

எனக்கு போட்டியை விட அதற்குரிய டிக்கெட்டுக்கு தான் நெருக்கடியாக உள்ளது. நிறைய நட்பு வட்டாரங்கள் என்னிடம் டிக்கெட் கேட்டு நச்சரிக்கிறார்கள். மிகப்பெரிய ஸ்டேடியத்தில் அதிகமான ரசிகர்கள் முன் விளையாடுவதை நெருக்கடியாக பார்க்கவில்லை. ஏனெனில் மெல்போர்ன் போன்ற பெரிய மைதானங்களில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. ரசிகர் பட்டாளத்தின் முன் சிறப்பாக விளையாடுவதற்கு எங்களுக்கு இது ஒரு வாய்ப்பாகும். ஐதராபாத்தில் ஆடிய போது எங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு கிடைத்தது. அதே போல் இங்கும் உற்சாகப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்