டி20 உலகக் கோப்பையில் வேறு நாட்டுக்காக விளையாடும் இந்தியர்கள்

டி20 உலகக் கோப்பையில் இந்தியா மட்டுமின்றி வேறு சில அணிகளிலும் இந்திய வீரர்கள் விளையாடுகின்றனர்.

Update: 2024-05-28 19:16 GMT

நியூயார்க்,

20 அணிகள் பங்கேற்கும் 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்துகின்றன. வருகிற 1-ந்தேதி தொடங்கும் இந்த போட்டிக்காக எல்லா அணிகளும் முழுவீச்சில் தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றன.

இந்த உலகக் கோப்பையில் இந்தியா மட்டுமின்றி வேறு சில அணிகளிலும் இந்திய வீரர்கள் விளையாடுகின்றனர். அவர்களின் விபரம் பின்வருமாறு;

அமெரிக்க கேப்டன்

முதல்முறையாக உலகக் கோப்பையில் களம் காணும் அமெரிக்க அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மோனக் பட்டேல் குஜராத்தில் பிறந்தவர். அந்த மாநில அணிக்காக 16 மற்றும் 18 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் விளையாடி இருக்கிறார். 2016-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து குடியுரிமை பெற்ற அவர் தற்போது அந்த அணியை வழிநடத்தும் அளவுக்கு தனது அந்தஸ்தை உயர்த்தியுள்ளார்.

இதே போல் அமெரிக்க அணிக்காக ஆடும் ஆல்-ரவுண்டர்கள் மிலிண்ட் குமார், ஹர்மீத் சிங் ஆகியோர் முன்பு திரிபுரா மாநில அணிக்காக ரஞ்சி கிரிக்கெட்டில் ஆடியவர்கள். மிலிண்ட் குமார் 2018-19 ரஞ்சி சீசனில் 1,331 ரன்கள் குவித்திருந்தார். இடக்கை வேகப்பந்து வீச்சாளர் சவுரப் நெட்ராவல்கரும் இந்தியரே.

ரச்சின் ரவீந்திரா

நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் 24 வயதான ரச்சின் ரவீந்திரா பெங்களூருவைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்தவர். 2023-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் 3 சதம் உள்பட 578 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தார். இந்த உலகக் கோப்பையிலும் கவனிக்கத்தக்க வீரர்களில் ஒருவராக இருக்கிறார். அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் சோதி இந்தியாவில் பிறந்து நியூசிலாந்தில் வளர்ந்தவர். நியூசிலாந்தின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

கேஷவ் மகராஜ்

தென்ஆப்பிரிக்க இடக்கை சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜியின் மூதாதையர்கள் இந்திய வம்சாவளியினர் என்பதை அவரே பலமுறை சொல்லி அறிந்த விஷயம்.

உகாண்டா, கனடா அணிகள்

20 ஓவர் உலகக் கோப்பையில் அறிமுக அணியாக அடியெடுத்து வைக்கும் ஆப்பிரிக்க தேசமான உகாண்டா அணியில் இடம் பெற்றுள்ள 15 வீரர்களில் ஆல்-ரவுண்டர் அல்பேஷ் ரம்ஜானியும் ஒருவர். முன்பு மும்பை ஜூனியர் அணியில் விளையாடி இருக்கிறார். இங்கிருந்து உகாண்டாவுக்கு சென்று தனது சர்வதேச கிரிக்கெட் கனவை நனவாக்கி கொண்டார். இடக்கை சுழற்பந்து வீச்சாளரான ரம்ஜானி 39 ஆட்டங்களில் 70 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.

இதே போல் கனடா அணிக்காக ஆடும் வீரர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானை பூர்விகமாக கொண்டவர்கள் ஆவர்.

 

Tags:    

மேலும் செய்திகள்