ஆஸி.க்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு - ராகுலிடம் இருந்து துணை கேப்டன் பதவி பறிப்பு?

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

Update: 2023-02-19 12:50 GMT

Image Courtesy: AFP 

புதுடெல்லி ,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 263 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்தியா 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ஆனால், இந்திய அணியின் அபார பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனால், 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 2வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியையும், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து கே.எல். ராகுல் நீக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியின் துணை கேப்டன் யார் என பிசிசிஐ குறிப்பிடவில்லை.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் கேப்டனாக ரோகித்தும், துணை கேப்டனாக பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் தொடர் மற்றும் எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் ஜெய்தேவ் உனத்கட் இடம் பிடித்துள்ளார்.

டெஸ்ட் அணி விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர் ), இஷன் கிஷன் (விக்கெட் கீப்பர் ), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஸ்ரேயஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேய்ஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல். ஹர்த்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), இஷன் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், ஜெய்தேவ் உனத்கட்.

இவ்விரு அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மார்ச்1 ம் தேதி தொடங்க உள்ளது.




Tags:    

மேலும் செய்திகள்