ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி நாளை அறிவிப்பு
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி முதல் செப்டம்பர் 17-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கிறது.;
புதுடெல்லி,
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி முதல் செப்டம்பர் 17-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கிறது.
ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று தேர்வு செய்யப்படும் என்று முதலில் செய்திகள் வெளியாகின. தற்போது இந்திய அணி தேர்வு ஒருநாள் தள்ளிபோடப்பட்டு நாளை (திங்கட்கிழமை) டெல்லியில் நடக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு கமிட்டியினர் 17 பேர் கொண்ட அணியை தேர்வு செய்து அறிவிக்கின்றனர்.
கேப்டன் ரோகித் சர்மா வீடியோ கான்பரன்ஸ் மூலம் அணி தேர்வில் கலந்து கொள்கிறார். பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் பங்கேற்பார் என்று தெரிகிறது. காயத்தில் இருந்து திரும்பி அயர்லாந்து 20 ஓவர் தொடரில் கேப்டன் பொறுப்பை கவனிக்கும் பும்ரா, காயத்தில் இருந்து மீண்டு பழைய நிலைக்கு திரும்ப தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அணியில் இடம் பெறுவது குறித்து முடிவு செய்யப்படும்.
அத்துடன் இந்தியாவில் அக்டோபர் 5-ந் தேதி தொடங்கும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான அணியும் இந்த தேர்வின் போது இறுதிசெய்யப்படும் என்று நம்பப்படுகிறது.