கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை

தொடரை முடிவு செய்யும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.;

Update: 2022-06-18 20:22 GMT

20 ஓவர் கிரிக்கெட்

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்காவும், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையை அடைந்துள்ளது.

இந்த நிலையில் தொடர் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறுகிறது.

8 நாட்கள் இடைவெளியில் 4 ஆட்டங்களில் விளையாடி விட்ட இந்திய அணி முதல் இரு ஆட்டங்களில் வெகுவாக தடுமாறியது. ஆனால் கடைசி இரு ஆட்டங்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டு தென்ஆப்பிரிக்காவை மிரள வைத்து விட்டது. 3-வது ஆட்டத்தில் அந்த அணியை 131 ரன்னில் சுருட்டிய இந்திய பவுலர்கள் கடந்த ஆட்டத்தில் வெறும் 87 ரன்னில் அடக்கினர். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவின் மோசமான ஸ்கோர் இது தான்.

ரிஷப் பண்ட்

பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார், ஹர்ஷல் பட்டேல், அவேஷ்கான், யுஸ்வேந்திர சாஹல் முக்கியமான நேரத்தில் கைகொடுத்துள்ளனர். பேட்டிங்கில் இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் நல்ல பார்மில் உள்ளனர். இளம் கேப்டன் ரிஷப் பண்ட் தான் இந்த தொடரில் ஜொலிக்கவில்லை. பெரும்பாலும் வைடாக செல்லும் பந்துகளை அடித்து விக்கெட்டுகளை தாரைவார்த்துள்ள அவர் கூடுதல் எச்சரிக்கையுடன் ஆட வேண்டியது அவசியமாகும்.

தென்ஆப்பிரிக்காவை எடுத்துக் கொண்டால், டெல்லி, கட்டாக் ஆகிய இடங்களில் நடந்த போட்டிகளில் பேட்டிங்கில் அமர்க்களப்படுத்தினர். டேவிட் மில்லர், வான்டெர் டஸன், ஹென்ரிச் கிளாசென் அரைசதம் அடித்தனர். ஆனால் முந்தைய இரு ஆட்டங்களில் சொதப்பி விட்ட அவர்கள் மீண்டும் எழுச்சி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். தொடக்க வீரர் குயின்டான் டி காக் கடந்த 6 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அவர் நிலைத்து நின்று ஆட வேண்டியது அந்த அணிக்கு அவசியமாகும்.

பவுமா காயம்

கேப்டன் பவுமா கடந்த ஆட்டத்தில் ரன்-அவுட்டில் இருந்து தப்பிக்க பாய்ந்து விழுந்ததில் முழங்கையில் காயமடைந்து பாதியில் வெளியேறினார். அவர் உடல்தகுதியை எட்டாவிட்டால் சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் அணியை வழிநடத்துவார்.

தென்ஆப்பிரிக்க அணி வெற்றியுடன் தாயகம் திரும்பும் வேட்கையுடன் உள்ளது. இந்திய வீரர்கள் உள்ளூரில் தொடரை இழந்து விடக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ளனர். எனவே இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

குறைவான பவுண்டரி தூரத்தை கொண்ட பெங்களூரு மைதானம் பொதுவாக பேட்டிங்குக்கு உகந்த வகையில் இருக்கும். இங்கு இந்திய அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் அடைந்துள்ளது. இதில் 2019-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதும் அடங்கும். 2017-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 202 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். 2016-ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இலங்கை 122 ரன் எடுத்தது குறைந்த பட்சமாகும்.

இரவு 7 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், அவேஷ்கான், ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல்.

தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், பவுமா (கேப்டன்) அல்லது ரீஜா ஹென்ரிக்ஸ், பிரிட்டோரியஸ், வான்டெர் டஸன், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், கேஷவ் மகராஜ், ரபடா, மார்கோ ஜேன்சன் அல்லது வெய்ன் பார்னெல், அன்ரிச் நோர்டியா, இங்கிடி அல்லது ஷம்சி.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்