ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்த இந்தியா

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

Update: 2024-07-07 15:13 GMT

image courtesy: twitter/@BCCI

ஹராரே,

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 13 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி கண்டது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 234 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அபிஷேக் சர்மா 100 ரன், ருதுராஜ் கெய்க்வாட் 77 ரன், ரிங்கு சிங் 48 ரன் எடுத்தனர்.

இதையடுத்து 235 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 134 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 100 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அவேஷ் கான், முகேஷ் குமார் தலா 3 விக்கெட், ரவி பிஷ்னோய் 2 விக்கெட், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதன் மூலம் ஜிம்பாப்பே அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற ஆஸ்திரேலியாவின் சாதனையையும் இந்தியா சமன் செய்தது. இதற்கு முன் கடந்த 2018-ம் ஆண்டு ஜிம்பாப்வேவை ஹராரே நகரில் ஆஸ்திரேலியாவும் 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்