கபடி, டென்னிஸ் விளையாட வர முடியும் என்றால் கிரிக்கெட் விளையாடவும் வரலாம் - சல்மான் பட்

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு (2025) பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.

Update: 2024-07-15 13:23 GMT

கோப்புப்படம்

கராச்சி,

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க 8 அணிகள் தகுதிபெற்றுள்ளன. கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்று முடிவில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்த தொடரில் விளையாட உள்ளன. இந்த தொடரை அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துபாய் அல்லது இலங்கையில் போட்டிகளை நடத்துமாறு ஐ.சி.சி-யிடம் பி.சி.சி.ஐ வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக ஐ.சி.சி இன்னும் முடிவு எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், கபடி, டென்னிஸ் விளையாட வர முடியும் என்றால் கிரிக்கெட் விளையாடவும் இந்திய அணி பாகிஸ்தான் வரவேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, 2025 சாம்பியன் டிராபியை நடத்தும் உரிமை பாகிஸ்தானுக்கு உள்ளது. அதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்த வேண்டும். மற்ற அனைத்து அணிகளும் பாகிஸ்தான் வந்து விளையாடுவதைப் போல இந்தியாவும் விளையாட வேண்டும்.

பாகிஸ்தான் உலகக்கோப்பைக்காக இந்தியா வந்து விளையாடியதை போல் இந்திய அணியும் இதை செய்ய வேண்டும். இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து நிறைய விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவின் கபடி மற்றும் டென்னிஸ் அணிகள் இதே பாகிஸ்தான் வந்து விளையாடுகின்றன. அது மட்டும் எப்படி நடக்கிறது. கபடி டென்னிஸ் விளையாட பாகிஸ்தான் வர முடியும் என்றால் கிரிக்கெட் விளையாடவும் இந்திய அணி பாகிஸ்தான் வரவேண்டும்.

எல்லாவற்றுக்கும் ஒரே போல இருக்க வேண்டும். இல்லையென்றால் கிரிக்கெட் விளையாட பாகிஸ்தான் வர முடியாதது போலவே, இந்திய அணி கபடி மற்றும் டென்னிஸ் விளையாடவும் பாகிஸ்தானுக்கு வரக்கூடாது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கக் கூடாது. இங்கு குறிப்பாக பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய வீரர்கள் வந்து விளையாடுவதை பார்க்க விரும்புகிறார்கள். பாகிஸ்தானில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு என பல ரசிகர்கள் இருக்கின்றனர்.

இங்கு நடைபெறும் உள்ளூர் தொடரான பிஎஸ்எல் லீக்கில் அவர்கள் விளையாடவில்லை என்று தெரிந்தும், ரசிகர்கள் அவர்களது போஸ்டர்களை கொண்டு மைதானத்திற்கு வருகிறார்கள். மக்கள் அவர்கள் விளையாடுவதை பார்க்க விரும்புகிறார்கள். இந்தியாவில் கூட சில பாகிஸ்தான் ரசிகர்கள் இருக்கவே செய்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்