இப்படி நடந்தால் ஆர்.சி.பி. அணி வேற லெவலாக மாறிவிடும் - ஏபி டி வில்லியர்ஸ் அட்வைஸ்
நடப்பு ஐ.பி.எல். சீசனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தடுமாற்றத்துடன் தொடங்கி உள்ளது.
பெங்களூரு,
ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த 10 அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நடப்பு சீசனை தடுமாற்றத்துடன் தொடங்கி உள்ளது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3 தோல்வி, ஒரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.
குறிப்பாக இந்த சீசனில் பெரும்பாலான அணிகள் தங்களுடைய சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வெற்றி கண்டு வருகிறது. ஆனால் ஆர்.சி.பி. சொந்த மண்ணில் விளையாடிய கொல்கத்தா மற்றும் லக்னோவுக்கு எதிராக தோல்வியை பதிவு செய்துள்ளது.
இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான போட்டியில் 182 ரன்களை இலக்காக கொண்டு சேசிங் செய்த பெங்களூருவுக்கு விராட் கோலி, கேப்டன் டு பிளிஸ்சிஸ், கேமரூன் க்ரீன், கிளன் மேக்ஸ்வெல் போன்ற நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தனர். இதனால் பெங்களூரு அந்த போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் ஆர்.சி.பி. அணியின் முன்னாள் வீரரான ஏபி டிவில்லியர்ஸ், தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள பெங்களூரு அணி வெற்றி பெற அறிவுரை வழங்கி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர்,
"விராட் கோலி ஆர்.சி.பி அணிக்காக ஒரு நல்ல தொடக்கத்தை கொடுப்பார் என்று நான் நம்புகிறேன். அந்த அணி நடு ஓவர்களில் கொஞ்சம் தடுமாறி வருகிறது. இதனால் முதல் ஆறு ஓவர்களை விராட் கோலி வெற்றிகரமாக கடந்து நடு ஓவர்களிலும் அவர் விளையாட வேண்டும். அதுதான் தற்போது ஆர்சிபி அணிக்கு மிகவும் முக்கியம்.
இதனால் தொடக்க சில ஓவர்களில் டு பிளஸ்சிஸ் அதிரடியாக விளையாடி ரிஸ்க் எடுக்க வேண்டும். அதன் பிறகு விராட் கோலி தம்மால் முடிந்தவரை ஆறாவது ஓவரிலிருந்து 15 வது ஓவர் வரை களத்தில் நின்று ரன் சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் ஆர்.சி.பி அணியின் மற்ற வீரர்களும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்ப்பார்கள். இப்படி நடந்தால் ஆர்.சி.பி. அணி வேற லெவலாக மாறிவிடும்.
ஆர் சி பி அணிக்கு இது மோசமான தொடக்கம் கிடையாது. அதேசமயம் நல்ல தொடக்கமும் இது இல்லை. தற்போது அவர்கள் நன்றாக விளையாடி அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பெற வேண்டும். என்னைக் கேட்டால் ஆர்.சி.பி அணி சின்னசாமி மைதானத்தில் விளையாடுவதை விட வேறு மைதானத்தில் விளையாடும்போது தான் அவர்களுக்கு வெற்றி மற்றும் அதிர்ஷ்டமும் கிடைக்கின்றது. இதனால் ஆர்.சி.பி. அடுத்தடுத்து தற்போது வெளி ஊர்களில் விளையாட உள்ளதால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என நம்புகிறேன்" என்று கூறினார்.