"நாக் அவுட் போன்ற ஒரு போட்டியில் தோல்வியை தழுவினால், அனைவரும் என்னை மோசமான கேப்டன் என கூறுவர்" - ரோகித் சர்மா

உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாட உள்ளன.

Update: 2023-11-02 05:04 GMT

image courtesy; AFP

மும்பை,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.

தனது முதல் 6 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளை வென்று, நடப்பு தொடரில் தோல்வி பக்கமே செல்லாத ஒரே அணியான இந்தியா 12 புள்ளிகளுடன் கம்பீரமாக வலம் வருகிறது. அரைஇறுதியை வெகுவாக நெருங்கி விட்ட இந்திய அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அதிகாரபூர்வமாக எட்டி விடும்.

இந்திய அணியில் பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா (ஒரு சதம், 2 அரைசதத்துடன் 398 ரன்கள்), விராட்கோலி (ஒரு சதம், 3 அரைசதத்துடன் 354 ரன்கள்), லோகேஷ் ராகுல் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜடேஜா, முகமது ஷமி மிரட்டுகிறார்கள்.

இந்நிலையில் 6 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளதால் பாராட்டும் அனைவரும் நாக் அவுட் போன்ற ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்தால் தம்மை மோசமான கேப்டன் என்று சொல்வார்கள் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். மேலும் உலகக்கோப்பையை வெல்லாமல் போனால் தமக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும் என்று தெரிவிக்கும் அவர் இத்தொடரில் ஆரம்பத்திலேயே இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுக்க வேண்டும் என்பதாலேயே அதிரடியாக விளையாடுவதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "ஒரு மோசமான போட்டி அமைந்தால் திடீரென நான் மோசமான கேப்டனாக மாறி விடுவேன். இந்த தொடரில் உலகக்கோப்பைக்கு குறைவாக எது கிடைத்தாலும் அது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகும். தற்போது என்னுடைய பேட்டிங்கை நான் மகிழ்ச்சியுடன் செய்கிறேன். அதே சமயம் அணியின் சூழ்நிலையையும் மனதில் வைத்து விளையாடுகிறேன். களத்திற்கு சென்று காட்டுத்தனமாக பேட்டை சுழற்றி விளையாடாமல் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல்  செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய மனநிலைமையாகும்.

ஒவ்வொரு முறையும் ஆட்டம் துவங்கும்போது ஸ்கோர் போர்டு ஜீரோவாக இருக்கும். நான் களமிறங்கும்போது எவ்விதமான விக்கெட்டும் விழாமல் இருக்கும் என்பதால் துவக்க வீரராக களமிறங்குவது சாதகம் என்று சொல்வீர்கள். ஆனால் கடந்த ஆட்டத்தில் நான் அதிரடியாக விளையாடியபோது மறுமுனையில் பவர் பிளே முடிவதற்குள் 3 விக்கெட்டுகள் விழுந்ததால் நாங்கள் அழுத்தத்திற்கு உள்ளானோம். மேலும் உலகக்கோப்பையில் பல போட்டிகளை பார்த்துள்ளோம். அதில் சிறிய அணிகள் பெரிய அணிகளை வெல்லும்போது அதை அப்சட் என்று நான் சொல்ல மாட்டேன்" என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்