'அவர் உலகக்கோப்பை தொடர் முழுவதும் விளையாடினால் இந்தியா கோப்பை வெல்வதை மற்ற அணிகளால் தடுக்க முடியாது'- இர்பான் பதான்

பும்ரா உலகக்கோப்பை தொடர் முழுவதும் விளையாடினால் இந்தியா கோப்பை வெல்வதை மற்ற அணிகளால் தடுக்க முடியாது என்று இர்பான் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-10 10:30 GMT

புது டெல்லி,13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி இருக்கிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 199 ரன்களில் அடங்கியது.

இதையடுத்து 200 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 2 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரோகித், கிஷன், ஐயர் ஆகியோர் 0 ரன்னில் அவுட் ஆகினர். இதையடுத்து ராகுல், கோலி இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

இந்த ஆட்டத்தில் துவக்க வீரர் மிட்சேல் மார்ஷை டக் அவுட்டாக்கிய பும்ரா உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு ஆஸ்திரேலிய துவக்க வீரரை டக் அவுட் செய்த முதல் இந்திய பவுலர் என்ற தனித்துவமான சாதனை படைத்தார். கடந்த வருடம் ஏற்பட்ட காயத்தால் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா என்று சந்தேகிக்கப்பட்ட அவர் தக்க சமயத்தில் குணமடைந்து 2023 ஆசிய கோப்பையில் அபாரமாக செயல்பட்டு முழுமையான பார்முக்கு திரும்பி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருவது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இந்நிலையில் பும்ரா உலகக்கோப்பை தொடர் முழுவதும் விளையாடினால் இந்தியா கோப்பை வெல்வதை வேறு அணிகளால் தடுக்க முடியாது என்று இர்பான் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "நிச்சயமாக அவரை விட சிறந்த பவுலர் இருக்க முடியாது. பும்ராவை விட அதிக அனுபவமிக்க பந்து வீச்சாளரும் கிடைக்க மாட்டார்கள். நல்ல பார்மில் இருக்கும் அவருக்கு இந்தியாவில் உள்ள பிட்ச்கள், சூழ்நிலைகள் நன்றாக தெரியும் என்பதால் அதற்கேற்றார்போல் தம்மை எப்படி அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்பதும் தெரியும். அந்த ஆட்டத்தில் அவர் மார்ஷை அவுட்டாக்கிய விதம் சிறப்பாக இருந்தது. குறிப்பாக அதற்கு முன்புவரை இன்ஸ்விங் பந்துகளை வீசிய அவர் திடீரென அந்தப் பந்தை அவுட் ஸ்விங்கர்போல காண்பித்து நேராக வீசினார். அந்த கேட்சை விராட் கோலி சிறப்பாக பிடித்தார். மேலும் பும்ரா பந்து வீசிய விதத்திற்கு இந்த உலகக்கோப்பை முழுவதும் பிட்டாக இருந்தால் வேறு எந்த அணியும் நாம் கோப்பையை வெல்வதை தடுத்து நிறுத்த முடியாது" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்