விராட் கோலியிடம் அந்த திறமை இருப்பதை நான் அப்போதே தெரிந்து கொண்டேன் - கம்பீர் பேட்டி

விராட் கோலி அறிமுக போட்டியில் விரைவில் அவுட்டானதாக கம்பீர் கூறியுள்ளார்.

Update: 2024-08-18 18:15 GMT

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய 16-வது வருடத்தை இன்று (ஆகஸ்ட் 18-ம் தேதி) நிறைவு செய்துள்ளார். அவருக்கு பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2008-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு இந்தியாவின் மேட்ச் வின்னராக அவதரித்தார்.

இந்நிலையில் 2008-ல் விராட் கோலி அறிமுகமானபோது ஆரம்பத்திலேயே அவுட்டானதாக இந்திய அணியின் தற்போதைய புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். இருப்பினும் இவர் இந்தியாவுக்காக நீண்ட காலம் விளையாடும் திறமையை கொண்டுள்ளார் என்பதை வலைப்பயிற்சியில் காண்பித்த உழைப்பை பார்த்து புரிந்து கொண்டதாக கம்பீர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இலங்கையில் நடைபெற்ற முதல் போட்டியில் அறிமுகமான விராட் கோலி மிகவும் வேகமாக அவுட்டானார். ஆனால் வலைப்பயிற்சியில் அவர் பேட்டிங் செய்த விதத்தை வைத்து இவர் நீண்ட காலம் இந்தியாவுக்காக விளையாடும் திறமையை கொண்டுள்ளார் என்பதை நான் தெரிந்து கொண்டேன். ஏனெனில் நல்ல திறமையை கொண்டுள்ள அவருக்கு சிறப்பாக செயல்பட கொஞ்சம் நேரம் மட்டுமே தேவைப்பட்டது. சிறப்பான அணுகுமுறை, நல்ல சுபாவம் கொண்ட அவருக்கு எப்படி போராடி தன்னுடைய அணிக்காக வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது தெரிகிறது. தன்னுடைய ஆரம்ப நாட்களிலேயே இந்திய அணிக்காக அவர் போட்டிகளை வென்று கொடுத்த விதம் நேர்மறையானதாக இருந்தது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்