இந்தியாவை வீழ்த்தி மீண்டும் கோப்பையை வெல்வோம் என்று நம்புகிறேன் - ஆஸ்திரேலிய வீரர்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.

Update: 2024-09-10 07:41 GMT

Image Courtesy: ICC Twitter 

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.

காலம் காலமாக ஆஸ்திரேலியாவில் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19-ம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதே போல 2020/21 தொடரில் ரகானே தலைமையில் இந்தியா 2 - 1 என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை (பார்டர்-கவாஸ்கர் டிராபி) வென்றது.

ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். மறுபுறம் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை பைனல்களில் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா வென்றது. அப்படியிருந்தும் கடந்த 2 பார்டர் கவாஸ்கர் தொடர்களில் சொந்த மண்ணில் இந்தியாவிடம் அந்த அணி தோல்வியை சந்தித்தது. எனவே இம்முறை அந்த தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இந்தியாவை வீழ்த்த ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது.

இந்நிலையில், இந்த தொடர் குறித்து ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் சில கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது எப்போதும் சவாலானதாகும். அவர்கள் ஆஸ்திரேலியாவில் நிலவும் சூழ்நிலைகளை பயன்படுத்தி விரும்பி விளையாடுகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் சவால் மிகப்பெரிதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். இந்திய அணியில் யார் இருக்கிறார்கள் என்பதை தாண்டி முதல் 6-7 பேட்ஸ்மேன்கள் எப்போதுமே நம்ப முடியாத வகையில் விளையாடுகின்றனர்.

எங்களுடைய தற்போதைய அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் இந்தியாவை ஒரு டெஸ்ட் தொடரில் வீழ்த்தியதில்லை. கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட் போன்றவர்கள் இந்தியாவை வென்றதில்லை. எனவே அடுத்து வரும் கோடைகாலத்தில் இந்தியாவை வீழ்த்தி மீண்டும் கோப்பையை வெல்வோம் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்