மும்பைக்கு எதிரான வெற்றியை நான் முன்பே கணித்திருந்தேன் - ஸ்ரேயாஸ் ஐயர்

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

Update: 2024-05-12 06:35 GMT

Image Courtesy: AFP

கொல்கத்தா,

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் மழை பெய்ததால் இந்த ஆட்டம் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 42 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் சால்வா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 158 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 16 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 18 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்று நடப்பு ஐ.பி.எல் தொடரில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

மும்பை தரப்பில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 40 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, ரசல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் 4 ஓவர்களில் 17 ரன் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய கொல்கத்தா வீரர் வருண் சக்ரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாங்கள் வெற்றி பெறுவோம் என தெரியும். முன்பே இந்த வெற்றியை நான் கணித்திருந்தேன். இந்த போட்டிக்கு முன்பாக எங்களது அணி வீரர்களிடம் நமது அணி முதல் அணியாக பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்று கூறினேன். போட்டியில் அழுத்தம் ஏற்பட்ட போதும் எங்கள் வீரர்கள் தாங்களாக முன்வந்து சிறப்பாக செயல்பட்டார்கள்.

பலரும் போட்டியை மாற்றினார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள். எந்த அணி நன்றாக விளையாடுகிறதோ அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 6 ஓவர்களில் அதிரடியாக ஆடியது. அந்த சூழ்நிலையில் இருந்து முன்னேறி வந்து வென்றது நன்றாக இருந்தது.

குறிப்பிட்ட நாளில் எந்த பந்துவீச்சாளர் சிறப்பாக செயல்படுகிறார் என்பது தான் முக்கியம். வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் என இருவருமே சிறப்பாக பந்து வீசினார்கள். நான்காவது ஓவரில் வருண் சக்கரவர்த்தி பந்து வீச வேண்டும் என நான் நினைத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்