'சாதனைகளை நினைத்து திருப்தி அடையக்கூடிய நபர் நான் அல்ல' - ரோகித் சர்மா
தன்னால் என்ன முடியுமோ அதை தொடர்ந்து சிறப்பாக செய்ய விரும்புவதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 273 ரன்கள் இலக்கை இந்தியா 35 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான ரோகித் சர்மா 84 பந்துகளில் 16 பவுண்டரி, 5 சிக்சருடன் 131 ரன்கள் விளாசி பல சாதனைகளை நிகழ்த்தினார்.
உலகக்கோப்பையில் அதிக சதங்கள் (7) அடித்த வீரர் என்ற சாதனையை வசப்படுத்திய அவர் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர்) அதிக சிக்சர் நொறுக்கியவர் (453 ஆட்டத்தில் 556 சிக்சர்) என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.
இதுவரை வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் 553 சிக்சருடன் (483 ஆட்டம்) முதலிடத்தில் இருந்தார். அவரை பின்னுக்கு தள்ளிய ரோகித் சர்மா சிக்சர் மன்னராக வலம் வருகிறார். இந்த வகையில் 3-வது இடத்தில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி (476 சிக்சர்) உள்ளார்.
இந்த நிலையில் கெய்லின் சாதனையை தகர்த்தது குறித்து 36 வயதான ரோகித்சர்மா கூறுகையில், 'கெய்ல் என்றுமே கிரிக்கெட் உலகின் அதிரடி ராஜா தான் (யுனிவர்ஸ் பாஸ்). கெய்ல் வழியில் நானும் அதிக சிக்சர் அடித்துள்ளேன். அவர் எப்போது களம் இறங்கி விளையாடினாலும் சிக்சர் எந்திரமாக மாறுவதை பல ஆண்டுகளாக பார்த்து இருக்கிறோம். நானும், அவரும் ஒரே மாதிரியான சீருடை எண் அணிந்து விளையாடுகிறோம். எங்களது எண் 45. அவரது சாதனையை இன்னொரு 45-ம் நம்பர் முறியடித்து இருப்பதால் நிச்சயம் அவர் மகிழ்ச்சியில் இருப்பார் என்று நினைக்கிறேன்.
நான் சர்வதேச கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய போது இவ்வளவு சிக்சர் அடிப்பேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. ஆனால் இதற்காக பல ஆண்டுகளாக உழைத்து இருக்கிறேன். அதற்குரிய பலன் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. செய்த சாதனைகளை நினைத்து திருப்தி அடையக்கூடிய நபர் நான் அல்ல. என்னால் என்ன முடியுமோ அதை தொடர்ந்து சிறப்பாக செய்ய விரும்புகிறேன். அதில் தான் எனது கவனம் இருக்கிறது. இது ஒரு சிறிய சந்தோஷமான தருணம் அவ்வளவு தான்' என்றார்.
கிறிஸ் கெய்ல் தனது சமூக வலைதள பதிவில், 'சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர் விளாசிய ரோகித் சர்மாவுக்கு வாழ்த்துகள்' என்று கூறியிருப்பதோடு இருவரது சீருடை 'நம்பர் 45' தெரியும்படியான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். பதிலுக்கு ரோகித் சர்மா நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் நமது சீருடை எண் 45 ஆக இருக்கலாம். ஆனால் தற்போது தனக்கு பிடித்தமான எண் 6 என்றும் குறிப்பிட்டுள்ளார்.