'முக்கியமான கட்டத்தில் அணியை வழிநடத்த இயலாமல் போனது ஆழ்ந்த வேதனை அளிக்கிறது' - கே.எல்.ராகுல்
தொடையில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்யப்படுவதால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருந்து கே.எல்.ராகுல் விலகியிருக்கிறார்.;
புதுடெல்லி,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் கடந்த 1-ந்தேதி நடந்த பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தின் போது காயமடைந்தார். பெங்களூரு கேப்டன் பிளிஸ்சிஸ் பவுண்டரி நோக்கி அடித்த பந்தை வேகமாக ஓடி தடுக்க முற்பட்ட போது வலது தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் பிசியோதெரபிஸ்ட் உதவியுடன் கைத்தாங்கலாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.
'ஸ்கேன்' பரிசோதனையில் தசைநார் கிழிந்திருப்பது தெரியவந்ததால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எஞ்சிய போட்டிகளில் இருந்து ஒதுங்கினார். இதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் கடந்த 5 சீசனில் தொடர்ந்து 500 ரன்னுக்கு மேல் குவித்து வியக்கவைத்த ராகுலின் சாதனை பயணம் முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் 9 ஆட்டங்களில் ஆடி 2 அரைசதம் உள்பட 274 ரன்கள் சேர்த்துள்ளார். ராகுலுக்கு பதிலாக அந்த அணியை ஆல்-ரவுண்டர் குருணல் பாண்ட்யா வழிநடத்துகிறார்.
அடுத்த மாதம் (ஜூன்) 7-ந்தேதி லண்டன் ஓவலில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் லோகேஷ் ராகுல் இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருந்தும் ராகுல் நேற்று விலகினார்.
இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில், 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட முடியாமல் போவது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. மீண்டும் அணிக்கு திரும்பி வெற்றிக்கு உதவுவதற்கான எல்லாவற்றையும் செய்வேன். அது தான் எனது இலக்கு. எனது காயத்தின் தன்மை குறித்து கவனமாக பரிசீலித்த மருத்துவ குழுவினர், தொடையில் ஏற்பட்ட காயத்துக்கு விரைவில் ஆபரேஷன் செய்வதே சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். ஆபரேஷனுக்கு பிறகு அதில் இருந்து மீள்வதற்கான பயிற்சியை விரைவில் தொடங்குவேன்' என்று கூறியுள்ளார்.
லக்னோ அணி குறித்து ராகுல் கூறுகையில், 'லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக முக்கியமான கட்டத்தில் அணியை வழிநடத்த இயலாமல் போனது ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. ஆனால் எங்களது வீரர்கள் எப்போதும் எழுச்சிமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை முன்னெடுத்து செல்வார்கள் என்று நம்புகிறேன்.
வெளியில் இருந்தாலும் ஒவ்வொரு ஆட்டத்தையும் பார்த்து அவர்களை உற்சாகப்படுத்துவேன். கடினமான இந்த தருணத்தில் எனக்கு பக்கபலமாக இருக்கும் லக்னோ அணி நிர்வாகம், இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி கடன்பட்டுள்ளேன்' என்றும் குறிப்பிட்டார்.