என்னுடைய சாதனையை இவர் முறியடிப்பார் - இந்திய வீரரை புகழ்ந்த பிரைன் லாரா
பிரைன் லாரா வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 299 ஒருநாள் போட்டிகள் மற்றும் 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.;
டிரினிடாட்,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரைன் லாரா. இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 299 ஒருநாள் போட்டிகள் மற்றும் 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ள லாரா 131 போட்டிகளில் 11953 ரன்களை குவித்துள்ளார். மேலும் அதில் 34 சதங்களை விளாசியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் தனிநபர் அதிகபட்ச ரன்கள் (400 ரன்கள்) அடித்த வீரராக இன்றளவும் முன்னிலையில் உள்ளார்.
இந்நிலையில் எதிர்காலத்தில் தன்னுடைய இந்த 400 ரன்கள் சாதனையை இந்திய இளம் வீரரான சுப்மன் கில் முறியடிப்பார் என பிரைன் லாரா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
சுப்மன் கில்லால் என்னுடைய இரண்டு சாதனைகளை முறியடிக்க முடியும். தற்போதுள்ள வீரர்களில் அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். உலக கோப்பையில் அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்றாலும் இதுவரை அவர் விளையாடி இருக்கும் விதத்தை பார்க்கும்போது அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சதம் அடித்துள்ள அவர் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமும் அடித்துள்ளார். இப்படி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள அவர் இனிவரும் ஐ.சி.சி தொடர்களிலும் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்துவார்.
அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னுடைய 400 ரன்கள் சாதனையை அவரால் நிச்சயம் கடக்க முடியும். அதுமட்டுமின்றி ஒருவேளை அவர் கவுண்டிக்கு சென்று விளையாடினால் அங்கு என்னுடைய 501 ரன்கள் சாதனையையும் அவரால் முறியடிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.