ஒருநாள் போட்டிகளில் தான் சரியாக ஆடவில்லை என்பதை முதல் ஆளாக அவரே ஒப்புக்கொள்வார் - இந்திய வீரர் குறித்து பயிற்சியாளர் டிராவிட் கருத்து

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது.

Update: 2023-07-30 06:34 GMT

Image Courtesy: Twitter

பார்படாஸ்,

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவது போட்டியில் இந்திய அணியும், நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இதையடுத்து தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது போட்டி ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறுகிறது.

இந்த வருடம் இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் வீரர்கள் தங்களது திறமையை காட்டி உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பெற தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இடத்திற்கு கடும் போட்டி நிலவி வருகிறது. ஸ்ரேயஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், கே.எல்.ராகுல் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகளிலும் இடம் பெற்ற சூர்யகுமார் யாதவ் முறையே 19 மற்றும் 24 ரன்களே எடுத்தார். டி20 கிரிக்கெட்டில் தனது அபாரமான பேட்டிங்கால் பல சாதனைகளை படைத்தும், சர்வதேச டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் இடத்திலும் உள்ள சூர்யகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சூர்யகுமார் யாதவின் பார்ம் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது,

சூர்யகுமார் யாதவ் சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. டி20 மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அவரது செயல்பாடுகள் அருமையாக இருந்துள்ளன. ஆனால் அங்கு விளையாடுவதை போல் அவரால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆட முடியவில்லை. இதை முதல் ஆளாக அவரே ஒப்புக்கொள்வார்.

அவர் ஐபிஎல் மூலம் நிறைய டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் அவர் இந்தியாவுக்காக அறிமுகமாகும் முன்பு நிறைய டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவர் நிறைய விளையாடவில்லை. ஏனெனில் ஐபிஎல் தொடரில் ஒருநாள் போட்டிகள் இல்லை என்பது உங்களுக்கு தெரியும்.

ஆனால் ஒருநாள் போட்டிகள் குறித்து அவர் கற்று வருகிறார் என நம்புகிறேன். மிடில் ஓவர்களில் எப்படி விளையாடுவது என்பது குறித்து அவர் புரிந்து கொண்டு வருகிறார். எனவே அவருக்கு நாங்கள் நிறைய வாய்ப்புகள் வழங்குவோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்