எனக்கு இருக்கும் அதே உரிமை அவருக்கும் உண்டு - விராட் கோலி உடனான உறவு குறித்து கம்பீர்

விராட் கோலி உடனான உறவு குறித்து கம்பீர் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

Update: 2024-05-31 07:07 GMT

image courtesy: AFP

புதுடெல்லி,

கடந்த 2023 ஐ.பி.எல். தொடரில் லக்னோ - ஆர்.சி.பி. அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது விராட் கோலி, லக்னோ அணியின் நவீன் உல் ஹக் மற்றும் கவுதம் கம்பீர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கவுதம் கம்பீர் மற்றும் நவீன் உல் ஹக் செல்லும் இடங்களில் எல்லாம் கோலி.. கோலி... என்று கோஷமிட்டு ரசிகர்கள் கிண்டல் செய்து வந்தனர். ஒரு கட்டத்தில் ரசிகர்களின் செயல்பாடுகள் எல்லை மீறியது.

இதன்பின் உலகக்கோப்பை தொடரின்போது நவீன் உல் ஹக்கை நேரடியாக அழைத்து விராட் கோலி கட்டி பிடித்து நட்பு பாராட்டினார். அதுமட்டுமல்லாமல் நவீன் உல் ஹக்கிற்கு ஆதரவாக ரசிகர்கள் கோஷம் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதன் பின் நவீன் உல் ஹக் - விராட் கோலி இடையிலான மோதல் முடிவுக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து நடப்பு ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின்போது விராட் கோலி களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். இதில் இடைவேளையின்போது மைதானத்திற்கு வந்த கவுதம் கம்பீர், நேரடியாக விராட் கோலியை அழைத்து கட்டிப்பிடித்து நட்பு பாராட்டினார். அனைவரும் களத்தில் மிகப்பெரிய மோதல் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், சூழலை இருவரும் சாதாரணமாக கடந்து சென்றனர்.

இப்படி கடந்த வருடம் காரசாரமாக வார்த்தை மோதலில் ஈடுபட்ட இருவரும் இந்த ஆண்டு சமரசமாக பேசிக் கொண்டது அனைவரது மத்தியிலும் மீண்டும் பேசு பொருளாக மாறியது. இந்நிலையில் இந்த சம்பவங்கள் குறித்தும் விராட் கோலிவுடனான உறவு குறித்தும் தற்போது கம்பீர் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

"விராட் கோலி உடனான எனது உறவை இந்த நாடு அறிய தேவையில்லை. ஆனால் உங்களின் கணிப்புகள் எல்லாம் உண்மைக்கு வெகு தொலைவில் உள்ளன. ஏனெனில் விராட் கோலிக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. அணியின் வெற்றிக்கு உதவுவதற்காக உணர்ச்சிகளை வெளிப்படுத்த எனக்கு என்ன உரிமை இருக்கிறதோ, அதேபோன்ற உரிமை அவருக்கும் உண்டு எங்களின் உறவு மக்களுக்கு மசாலா கொடுக்கும் உறவாக இருக்காது" என்று கூறினார்.

அதேபோன்று கம்பீர் குறித்து பேசிய விராட் கோலி ஏற்கனவே சில கருத்துக்களை அளித்திருந்தார். நான் கம்பீருடன் சமரசத்தில் ஈடுபட்டது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்து விட்டது என்று கிண்டலாக தெரிவித்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்