2007 மற்றும் 2024 டி20 உலகக்கோப்பைகளை வென்ற இந்திய அணிகளை ஒப்பிட்டு பேசிய - ஹர்பஜன் சிங்
இந்திய கிரிக்கெட் அணி 2007 மற்றும் 2024-ல் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
மும்பை,
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் இந்த வருடம் நடைபெற்ற ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா 2-வது டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது.
முன்னதாக 2007-ல் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையின் முதலாவது சீசனில் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றி இருந்தது. அதன்பின் 17 வருடங்கள் கழித்து தற்போதுதான் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.
இந்நிலையில் இந்த 2 டி20 உலகக்கோப்பைகளையும் வென்ற இந்திய அணிகளை ஒப்பிட்டு முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "2007 டி20 உலகக் கோப்பை வென்ற எங்கள் அணியை விட 2024 டி20 உலகக்கோப்பை வென்ற அணியில் அதிக மேட்ச் வின்னர்கள் இருந்தார்கள். அப்போது டி20 போட்டிகள் என்பது எங்களுக்கு புதிதாக இருந்தது. நாங்கள் அப்போதுதான் முதல்முறையாக அதில் ஆடினோம். டி20 கிரிக்கெட் என்றால் என்ன என்று எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. போட்டியின் ஓட்டத்திற்கு ஏற்ப சென்று நாங்கள் வெற்றி பெற்றோம். 2007-ல் எங்கள் அணியில் பெரிய வீரர்கள் யாரும் இல்லை. யுவராஜ் சிங், சேவாக், நான் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் மட்டுமே அனுபவ வீரர்களாக இருந்தோம்.
பெரும்பாலான வீரர்கள் இந்திய அணிக்கு புதிதாக இருந்தார்கள். தோனி முதல் முறையாக கேப்டனாக செயல்பட்டார். ஆனால், இப்போதைய அணியை நீங்கள் எடுத்துப் பாருங்கள். ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா என எல்லோருமே மேட்ச் வின்னர்கள். அதன் பின், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் அக்சர் படேல் ஆகியோர் இருந்தனர். அக்சர் படேல் குறித்து மக்கள் அதிகம் பேசுவதில்லை. இறுதிப்போட்டியில் அவரது செயல்பாட்டை பாருங்கள். சிறப்பாக ஆடி இருந்தார். பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஒட்டுமொத்த தொடரிலும் சிறப்பாக செயல்பட்டனர். அந்த அணியில் இருந்த எல்லோருமே மேட்ச் வின்னர்கள். அவர்கள் சிறப்பாக கிரிக்கெட் ஆடி வெற்றி பெற்றார்கள்" என்று கூறினார்.