வெவ்வேறு பந்துவீச்சாளர்களுக்கு எதிராக வெவ்வேறு திட்டங்களை வைத்திருந்தேன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்
வெவ்வேறு பந்துவீச்சாளர்களுக்கு எதிராக வெவ்வேறு திட்டங்களை வைத்திருந்தேன் என யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
ஹராரே,
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி 152 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 153 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 15.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 156 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்வால் அளித்த பேட்டியில் கூறியதாவது,
இன்று (நேற்று) நான் என்னுடைய பேட்டிங்கை ரசித்து விளையாடினேன். மேலும் வெவ்வேறு பந்துவீச்சாளர்களுக்கு வெவ்வேறு திட்டங்களையும் வைத்திருந்தேன். பந்து புதியதாக இருக்கும் பொழுது பேட்டிங் செய்ய வசதியாக இருந்தது. பந்து பழையதாக மாறியதும் சற்று நின்று வந்தது. உடனே சுதாரித்து கொண்டு அதற்கு தகுந்தபடி என்னுடைய பேட்டிங் திட்டத்தை மாற்றிக் கொண்டேன்.
கில் உடன் பேட்டிங் செய்வதை ரசித்து நான் விளையாடினேன். ஆரம்பத்தில் அதிரடியாக ஆடி ரன்கள் எடுக்க நினைத்தேன். அதன் பின்னர் இறுதிவரை நின்று ஆட்டத்தை முடிப்பது குறித்து யோசித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.