ஐ.பி.எல். : இன்றைய போட்டியில் லாவண்டர் நிற ஜெர்சியில் களமிறங்கும் குஜராத் அணி..!!

ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் லாவண்டர் நிற ஜெர்சியில் குஜராத் அணி வீரர்கள் களமிறங்க உள்ளனர்.;

Update: 2023-05-15 08:59 GMT

ஆமதாபாத்,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் இந்த 20 ஓவர் திருவிழாவில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் 62-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்சை சந்திக்கிறது.

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் 12 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 4 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை நெருங்கி விட்டது.

கடந்த ஆட்டத்தில் செய்த தவறுகளை களைந்து அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும் ஆவலில் உள்ள குஜராத் அணியின் பேட்டிங்கில் சுப்மன் கில் (475 ரன்கள்), கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (281), விருத்திமான் சஹா (275), டேவிட் மில்லர் (242), விஜய் சங்கரும் (234), பந்து வீச்சில் ரஷித் கான் (23 விக்கெட்), முகமது ஷமி (19), மொகித் ஷர்மா, நூர் அகமது, அல்ஜாரி ஜோசப்பும் நல்ல நிலையில் உள்ளனர்.

மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 7 தோல்வி என 8 புள்ளிகளுடன் உள்ளது. அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்து விட்டதால் இதற்கு மேல் இழக்க எதுவுமில்லை என்ற நிலையில் இருக்கும் ஐதராபாத் அணி, குஜராத்தின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டு புள்ளிபட்டியலில் முன்னேற்றம் காண முயற்சிக்கும். ஐ.பி.எல். தொடரில் இவ்விரு அணிகளும் 2 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத், ஐதராபாத் அணிகள் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்கும் வகையில், நடப்பு சீசனின் இன்றைய ஆட்டத்தில் லாவண்டர் ஜெர்சி அணிந்து குஜராத் அணி வீரர்கள் விளையாட உள்ளனர்.

முன்னதாக இதுதொடர்பாக குஜராத் டைட்டன்ஸ் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், "இன்றைய போட்டியில் ஒரு சிறப்பு காரணத்திற்காக லாவெண்டர் வண்ணங்களை அணிய நாங்கள் தயாராக இருக்கிறோம். குஜராத் டைட்டன்ஸ் ஒருவரின் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டுள்ளது! புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த எங்களுடன் சேருங்கள்" என்று தெரிவித்திருந்தது.

லாவெண்டர் கலர் ரிப்பன் அனைத்து வகையான புற்றுநோய்களையும் குறிக்கிறது, எனவே இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான கடைசி லீக் ஹோம் ஆட்டத்தில் குஜராத் அணி இந்த நிறத்தைப் பயன்படுத்த உள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சஹா, சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் திவேதியா, ரஷித் கான், நூர் அகமது, அல்ஜாரி ஜோசப், முகமது ஷமி.

ஐதராபாத் சன் ரைசர்ஸ்: அன்மோல்பிரீத் சிங், அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், கிளென் பிலிப்ஸ், அப்துல் சமத், புவனேஷ்வர் குமார், நடராஜன், மயங்க் மார்கண்டே, பசல்ஹக் பரூக்கி.


Tags:    

மேலும் செய்திகள்