பெண்கள் பிரிமியர் லீக்: முதல் வெற்றியை பதிவு செய்த குஜராத் அணி..!!
பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் பெங்களூருவை தோற்கடித்து குஜராத் அணி முதலாவது வெற்றியை பதிவு செய்தது.;
மும்பை,
முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் சந்தித்தன.
'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த குஜராத் அணியில் தொடக்க வீராங்கனை சபினெனி மேகனா 8 ரன்னில் மேகன் ஸ்கட் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷிடம் சிக்கினார்.
டங்லி அதிவேக அரைசதம்
இதைத்தொடர்ந்து ஹர்லீன் தியோல், சோபியா டங்லியுடன் கைகோர்த்தார். தொடக்கம் முதலே வேகமாக மட்டையை சுழற்றிய சோபியா டங்லி, வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் வீசிய ஒரு ஓவரில் 2 பவுண்டரி ஒரு சிக்சரும், அடுத்த ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் பிரீத்தி போஸ் பந்து வீச்சில் தொடர்ச்சியாக 4 பவுண்டரி, ஒரு சிக்சரும் விளாசி அமர்க்களப்படுத்தியதுடன் 18 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். பெண்கள் பிரிமீயர் லீக்கில் ஒரு வீராங்கனையின் மின்னல்வேக அரைசதம் இது தான்.
தொடர்ந்து சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயங்கா பட்டீல் வீசிய ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விரட்டிய சோபியா டங்லி (65 ரன்கள், 28 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) அவரது அடுத்த பந்தில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஆஷ்லி கார்ட்னெர் (19 ரன்), ஹேமலதா (16 ரன்), சுதர்லாண்ட் (14 ரன்), பொறுப்பு கேப்டன் சினே ராணா (2 ரன்) ஆகியோர் அவசர கதியில் ஆடி, வந்த வேகத்திலேயே ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினர்.
201 ரன் குவிப்பு
ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் ஹர்லீன் தியோல் ரசிகர்களுக்கு விருந்து படைத்ததுடன் அணியின் ஸ்கோரை துரிதமாக உயர்த்தினார். 35 பந்துகளில் அரைசதத்தை கடந்த ஹர்லீன் தியோல் 67 ரன்களில் (45 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி ஓவரில் ஸ்ரேயங்கா பட்டீல் பந்து வீச்சில் போல்டு ஆனார்.
20 ஓவர் முடிவில் குஜராத் அணி 7 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்தது. பெங்களூரு தரப்பில் ஸ்ரேயங்கா பட்டீல், ஹீதர் நைட் தலா 2 விக்கெட்டும், மேகன் ஸ்கட், ரேணுகா சிங் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
சோபி டெவின் 66 ரன்
பின்னர் 202 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணியில் கேப்டன் ஸ்மிர்தி மந்தனா (18 ரன்), எலிஸ் பெர்ரி (32 ரன்), விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் (10 ரன்), சோபி டெவின் (66 ரன், 45 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), கனிகா அகுஜா (10 ரன்) உள்ளிட்டோர் சீரான இடைவெளியில் வெளியேறினர். கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 24 ரன் தேவைப்பட்டது.
பரபரப்பான கடைசி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் சுதர்லாண்ட் வீசினார். அவர் ஒரு விக்கெட் வீழ்த்தியதுடன் 12 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து தங்கள் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
குஜராத் வெற்றி
பெங்களூரு அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 190 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 11 ரன் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. ஹீதர் நைட் (30 ரன்), ஸ்ரேயங்கா பட்டீல் (11 ரன்) களத்தில் இருந்தனர். குஜராத் தரப்பில் ஆஷ்லி கார்ட்னெர் 3 விக்கெட்டும், சுதர்லாண்ட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
3-வது லீக்கில் ஆடிய குஜராத் அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். அதே சமயம் இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத ஒரே அணியான பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.
இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் (இரவு 7.30 மணி) மோதுகின்றன. தலா 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ள இவ்விரு அணிகள் 'ஹாட்ரிக்' வெற்றியை நோக்கி மல்லுகட்டுகின்றன.