கில், கெய்க்வாட் அபாரம்: ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.;

Update: 2023-09-22 16:21 GMT

மொகாலி,

கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், மிட்சேல் மார்ஷ் களமிறங்கினர். மார்ஷ் ஒரு ரன்னில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து டேவிட் வார்னர்- ஸ்மித் இருவரும் இணைந்து சீரான வேகத்தில் ரன்களை திரட்டினர். வார்னர் அரைசதம் அடித்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஸ்மித்(41), லபுசேன்(39), கிரீன்(31), இங்கிலிஷ்(45), ஸ்டோய்னிஸ்(29) ஆகியோருக்கு சிறந்த தொடக்கம் கிடைத்தும், அதனை பெரிய ஸ்கோராக மாற்ற தவறினர்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனை தொடர்ந்து 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில்லும், ருதுராஜ் கெய்க்வாட்டும் களமிறங்கினர். இருவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுத்ததுடன் அரைசதம் கடந்தனர்.

இவர்கள் இருவரையும் பிரிக்க ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் நீண்ட நேரம் போராடினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது. ருதுராஜ் 71 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனை தொடர்ந்து வந்த ஸ்ரேயஸ் அய்யர் வந்த வேகத்தில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். சிறிதுநேரத்தில் சுப்மன் கில்லும் 74 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அடுத்து வந்த இஷான் கிஷன் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எனினும், சூர்யகுமார் யாதவ் மற்றும் கே.எல்.ராகுல் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதம் 50 ரன்கள் எடுத்து சிக்ஸ் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். மறுமுனையில் பொறுமையுடன் விளையாடி வந்த கேப்டன் கே.எல்.ராகுல் அரைசதம் அடித்ததுடன், சிக்சர் அடித்து போட்டியை வெற்றியுடன் முடித்துவைத்தார்.

இறுதியில் இந்திய அணி 48.4 ஓவர்களில் 5 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து வெற்றிபெற்றது. ஆஸ்திரேலிய தரப்பில் ஆடம் ஜாம்பா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தூரில் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்