கம்பீர் நீண்ட காலம் பயிற்சியாளராக நீடிக்க மாட்டார் - இந்திய முன்னாள் வீரர் கணிப்பு

கம்பீர் பெரும்பாலும் தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடியவர் என்று ஜோஹிந்தர் சர்மா தெரிவித்துள்ளார்.

Update: 2024-08-04 09:50 GMT

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல். தொடரில் கேப்டனாக 2 கோப்பைகளை வென்று கொடுத்த அவர், இந்த சீசனில் அந்த அணியின் ஆலோசகராக செயல்பட்டு கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். இதனால் அவர் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் கேப்டனாகவும் ஆலோசகராகவும் ஐபிஎல் கோப்பையையும் வென்ற காரணத்தால் ராகுல் டிராவிட்டுக்குப் பின் அவரை பிசிசிஐ புதிய பயிற்சியாளராக நியமித்துள்ளது.

அந்த வகையில் புதிய பயிற்சியாளராக வந்ததும் கவுதம் கம்பீர் இந்திய அணியில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். இந்திய அணியின் புதிய டி20 கேப்டனாக சூர்யகுமாரை தேர்ந்தெடுத்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் ரோகித் சர்மா ஓய்வுக்கு பின் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று அனைவரும் நினைத்தனர்.

ஆனால் பிட்டாக இல்லை என்று சொல்லி அவரை கழற்றி விட்ட கம்பீர் துணை கேப்டனாக சுப்மன் கில்லை தேர்ந்தெடுத்தது நிறைய முன்னாள் வீரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அப்படி சில அதிரடியான முடிவுகளை எடுத்து வரும் கம்பீர் 2027 -ம் ஆண்டு வரை இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.

இந்நிலையில் கவுதம் கம்பீர் பெரும்பாலும் வீரர்களின் பேச்சைக் கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடியவர் என்று இந்திய முன்னாள் வீரர் ஜோஹிந்தர் சர்மா தெரிவித்துள்ளார். எனவே நீண்டகாலம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க மாட்டார் என்றும் அவர் கணித்துள்ளார்.

இது பற்றி பேசியது பின்வருமாறு:- "கவுதம் கம்பீர் நமது அணியை நிர்வகிக்க வேண்டியவர். ஆனால் அந்த இடத்தில் அவர் நீண்ட காலம் இருக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் கவுதம் கம்பீர் தன்னுடைய சொந்த முடிவுகளை எடுக்கக் கூடியவர். அதனால் ஏதோ ஒரு கட்டத்தில் இந்திய வீரர்களுடன் அவருக்கு முரண்பாடு ஏற்படலாம். இங்கே விராட் கோலியை பற்றி நான் பேசவில்லை. ஆனால் பெரும்பாலான தருணங்களில் கவுதம் கம்பீர் எடுக்கும் முடிவுகள் மற்றவர்கள் விரும்பும் வகையில் இருக்காது. அத்துடன் கவுதம் கம்பீர் எதையும் நேரடியாக பேசுவார். அவர் யாரிடமும் தாமாக செல்ல மாட்டார். அவர் தன்னுடைய வேலையை உண்மையாக செய்வார்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்