ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை.. தனித்துவ சாதனை படைத்த சுப்மன் கில்- புவனேஸ்வர் குமார்...!
ஐபிஎல் தொடரில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
ஆமதாபாத்,
ஐபிஎல் தொடரில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஏராளமான சாதனைகள் படைக்கப்பட்டு முறியடிக்கப்பட்டன. குஜராத் அணி வீரர் சுப்மன் கில் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார்.
குஜராத் அணிக்காக முதல் சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் கில் படைத்தார். ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஐந்து விக்கெட்டுகளை எடுத்து பேட்டிங்கில் 27 ரன்களை எடுத்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் ஒரே இன்னிங்சில் சதம் அடித்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் எதிரணி ஜோடி சுப்மன் கில் மற்றும் புவனேஷ்வர் குமார் என்ற சாதனையை படைத்துள்ளனர்.
ஐபிஎல் வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை. ஆண்கள் டி20 கிரிக்கெட்டில் கூட, இதற்கு முன் இரண்டு முறை மட்டுமே இது நடந்துள்ளது. சையது முஷ்டாக் அலி டிராபியில் கர்நாடகாவின் கருண் நாயர் (111), தமிழகம் சார்பில் அதிசயராஜ் டேவிட்சன் (5/30) இந்த சாதனையை படைத்தனர்.
2021-ல் பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரியா இடையேயான டி20 சர்வதேச ஆட்டத்தில் இதுபோன்ற மற்றொரு நிகழ்வு நடந்தது. பெல்ஜியத்தின் சபர் ஜாகில் (100*) மற்றும் ஆஸ்திரியாவின் அகிப் இக்பால் (5/5) ஜோடி சில ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற ஒரு தனித்துவமான சாதனை படைக்கப்பட்டுள்ளது.
நேற்றையை ஆட்டத்தின் வெற்றி பெற்றதன் மூலம் குஜராத் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. மேலும், ஐதராபாத் அணி தோல்வி அடைந்ததன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து விட்டது.