'15 வருட கிரிக்கெட்டில் முதல் முறையாக...' - இலங்கைக்கு எதிரான ஆட்டம் குறித்து விராட் கோலி கருத்து..!
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா - இலங்கை அணிகள் மோத உள்ளன.
கொழும்பு,
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. சூப்பர்4 சுற்றுக்கு தகுதி கண்டுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்த தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன் தினம் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த ஆட்டத்துக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததால் பாதியில் நின்று போன ஆட்டம் நேற்று நடைப்பெற்றது.
இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 356 ரன்கள் குவித்தது. கோலி 122 ரன், ராகுல் 111 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இதையடுத்து 357 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்னில் அடங்கியது. ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா காயத்தால் பேட் செய்யவில்லை. இதன் மூலம் இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது.
இந்நிலையில் இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இன்று இலங்கையை கொழும்பில் சந்திக்கிறது. நேற்று ரிசர்வ் டே ஆக அறிவிக்கப்பட்டு போட்டி நடந்ததால் இந்திய வீரர்கள் ஓய்வின்றி இன்று இலங்கையை சந்திக்க உள்ளனர். இந்திய நேரப்படி ஆட்டம் மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது பெற்ற கோலி இலங்கைக்கு எதிரான மோதல் குறித்து கூறியதாவது,
என்னுடைய 15 வருட கிரிக்கெட்டில் இது போன்று செய்வது இதுவே முதல் முறை. அதிர்ஷ்டவசமாக நாங்கள் டெஸ்ட் வீரர்கள் என்பதால், அடுத்த நாள் திரும்பி வந்து எப்படி விளையாடுவது என்பது எங்களுக்குத் தெரியும். மீட்பு மிக முக்கியமானது.
இன்று (நேற்று) அங்கு ஈரமாக இருந்தது. நவம்பரில் எனக்கு 35 வயதாக உள்ளது. அதனால் நான் அடுத்த போட்டிக்கு உடனடியாக தயாராகுவதை கவனித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.