முதலாவது டி20 கிரிக்கெட்: இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்

இந்தியா- ஆப்கானிஸ்தான் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று நடக்கிறது.

Update: 2024-01-11 01:15 GMT

மொகாலி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று நடக்கிறது. ஜூன் மாதம் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கு முன்பாக இந்தியா விளையாடும் கடைசி 20 ஓவர் தொடர் இது என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய 20 ஓவர் அணியின் வழக்கமான கேப்டன் ஹர்திக் பாண்டயா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் காயத்தில் சிக்கியிருப்பதால் ரோகித் சர்மாவிடம் மீண்டும் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவருடன் மற்றொரு மூத்த வீரர் விராட் கோலியும் 14 மாதங்களுக்கு பிறகு 20 ஓவர் அணிக்கு திரும்பி இருக்கிறார்.

உலகக் கோப்பை போட்டியை மனதில் வைத்து தேர்வாகி இருப்பதால் இவர்கள் இருவரின் செயல்பாடு இந்த தொடரில் உன்னிப்பாக கவனிக்கப்படும். விராட் கோலி தொடக்க ஆட்டத்தில் மட்டும் விளையாடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகி இருப்பதாகவும், கடைசி இரு ஆட்டங்களில் அவர் ஆடுவார் என்றும் பயிற்சியாளர் டிராவிட் நேற்று தெரிவித்தார்.

கேப்டன் ரோகித் சர்மாவுடன், 'இளம் புயல்' ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக இறங்குவார் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். சுப்மன் கில், திலக் வர்மா, அதிரடி வீரர் ரிங்கு சிங் ஆகியோரும் பேட்டிங் வரிசைக்கு வலு சேர்க்கிறார்கள். விக்கெட் கீப்பர் இடத்திற்கு ஜிதேஷ் ஷர்மா அல்லது சஞ்சு சாம்சன் ஆகியோரில் ஒருவர் இடம் பெறுவார். பந்து வீச்சில் குல்தீப் யாதவ், பிஷ்னோய், அர்ஷ்தீப்சிங் மிரட்ட காத்திருக்கிறார்கள்.

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முன்னணி அணிகளுக்கு எல்லாம் அதிர்ச்சி வைத்தியம் அளித்த ஆப்கானிஸ்தானை எந்த வகையிலும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. கேப்டன் இப்ராகிம் ஜட்ரன், ரமனுல்லா குர்பாஸ், ரஹமத் ஷா பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர். இதேபோல் முஜீப் ரகுமான், முகமது நபி, நூர் அகமது என்று தரமான சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் பஞ்சமில்லை. அடிக்கடி இந்தியாவில் விளையாடியுள்ள அவர்களுக்கு இங்குள்ள சூழல் பழக்கப்பட்ட ஒன்று என்பதால் கடும் நெருக்கடி கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் பிரதான சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் இந்த தொடரில் விலகி இருப்பது சற்று பின்னடைவாகும். முதுகு காயத்துக்கு ஆபரேஷன் செய்துள்ள ரஷித்கானும் இந்தியாவுக்கு வந்துள்ளார். ஆனால் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் இந்த தொடரில் ஆடமாட்டார் என்று கேப்டன் இப்ராகிம் ஜட்ரன் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், 'ரஷித்கான் இன்னும் முழு உடல்தகுதியை எட்டவில்லை. அவர் இல்லாதது எங்களுக்கு தடுமாற்றம் தான். கிரிக்கெட்டை பொறுத்தவரை எந்த விதமான சூழலை எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். இருப்பினும் அவர் அணியினருடன் இருப்பதால் அவரது அனுபவம் உதவிகரமாக இருக்கும். இந்தியாவுக்கு எதிராக அதுவும் அவர்களது இடத்தில் மோதுவது கடினமாக இருக்கும். ஆனால் நாங்கள் இங்கு வெற்றி பெறுவதற்காகவே வந்துள்ளோம். டி20 கிரிக்கெட்டில் திறமையான வீரர்கள் பலர் அணியில் உள்ளனர். நிச்சயம் நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்' என்றார்.

டிராவிட் கருத்து

இந்திய பயிற்சியாளர் டிராவிட் நிருபர்களிடம் கூறுகையில், 'ஆப்கானிஸ்தானிடம் சில சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பது தெரியும். அவர்கள் எங்களுடைய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார்கள். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக எப்படி ஆதிக்கம் செலுத்துவது என்பது குறித்து ஆலோசித்துள்ளோம். சுழல் சவாலை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்' என்றார்.

20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 5 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 4-ல் இந்தியா வெற்றி பெற்றது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. ஆசிய கோப்பை, உலகக் கோப்பை போட்டிகளில் மோதியுள்ள இவ்விரு அணிகள் இரு நாட்டு வெள்ளைநிற பந்து கிரிக்கெட் தொடரில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், திலக் வர்மா, ஜிதேஷ் ஷர்மா அல்லது சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் அல்லது ரவி பிஷ்னோய், அவேஷ்கான், அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார்.

ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரத்துல்லா ஜசாய், குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன் (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், நஜிபுல்லா ஜட்ரன், முகமது நபி, குல்படின் நைப் அல்லது கரிம் ஜனத், முஜீப் ரகுமான், கியாஸ் அகமது, நவீன் உல்-ஹக், பசல்ஹக் பரூக்கி.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்