முதல் ஒருநாள் போட்டி; வங்காளதேசத்தை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி..!
வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது.;
டுனெடின்,
வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களம் இறங்கினர். இதில் ரவீந்திரா மற்றும் அடுத்து களம் இறங்கிய ஹென்றி நிக்கோல்ஸ் இருவரும் ரன் எடுக்காமல் அவுட் ஆகினர்.
இதையடுத்து கேப்டன் டால் லாதம் களம் இறங்கினார். வில் யங் மற்றும் லாதம் இணை பொறுமையாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ஆட்டத்தின் 20வது ஓவரில் மழை குறுக்கிட்டதால் சிறிது நேரம் ஆட்டம் தடைப்பட்டது.
இதையடுத்து மழை நின்ற பின்னர் ஆட்டம் 30 ஓவர்களாக குறைக்கப்பட்டு மீண்டும் தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் ஆடிய யங் - லாதம் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லாதம் 92 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து மார்க் சாம்ப்மேன் களம் இறங்கினார்.
மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் யங் சதம் அடித்த நிலையில் 105 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 30 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. இதையடுத்து டிஎல்எஸ் முறையில் 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி ஆடியது.
வங்காளதேச அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய சவுமியா சர்கார் 0 ரன், அனாமுல் ஹக் 43 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய ஷாண்டோ 15 ரன், லிட்டன் தாஸ் 22 ரன், ஹிரிடோய் 33 ரன், ரஹீம் 4 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இறுதியில் வங்காளதேச அணியால் 30 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களே எடுக்க முடிந்தது. இதையடுத்து 44 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது.