ஒருநாள் போட்டிகளில் அதிவேக 50 விக்கெட் ; வாக்கர் யூனிஸ் சாதனையை சமன் செய்த ஹரிஸ் ரவூப்
பாகிஸ்தான் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 50 விக்கெட் வீழ்த்திய 3-வது பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஹரிஸ் ரவூப் படைத்துள்ளார்.;
லாகூர்,
ஆசிய கோப்பை தொடரின் 'குரூப் 4' சுற்றில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப் வங்காளதேச பேட்ஸ்மேன் தவ்ஹித் ஹரிடோயின் விக்கெட்டை வீழ்த்தினார். இது அவரது 50 விக்கெட்டாக பதிவானது.
இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்காக அதிவேகமாக 50 விக்கெட் வீழ்த்திய 3-வது பந்து வீச்சாளர் என்ற சாதனையை முன்னாள் வீரர் வாக்கர் யூனிசுடன் பகிர்ந்துள்ளார். இருவரும் தங்களது 27 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இந்த பட்டியலில் 24 போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தி ஹசன் அலி முதலிடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் ஷாஹின் அப்ரிடி உள்ளார். அவர் 25 போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.