எலிமினேட்டர்: மும்பை - லக்னோ அணிகள் இன்று மோதல் - வெற்றி வாய்ப்பு யாருக்கு...?

ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை - லக்னோ அணிகள் மோத உள்ளன.

Update: 2023-05-24 02:00 GMT

Image Courtesy: @LucknowIPL

சென்னை,

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது குவாலிபையர் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தோல்வி அடைந்த குஜராத் டைட்டன்ஸ் குவாலிபையர் 2ல் ஆட உள்ளது.

இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றும் குஜராத்துக்கு எதிரான குவாலிபையர் 2ல் ஆடும். அதே வேளையில் தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.

இந்நிலையில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பு எந்த அணிக்கு உள்ளது என்பது பற்றி பார்க்கலாம். முதலில் பிட்ச் ரிப்போர்ட், போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டமும் சென்னையில் தான் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற பாண்ட்யா இரவு பனி பொழிவு இருக்கும் என நினைத்து 2வது பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஆனால் அவரது கணிப்பு பொய்யாகும்படி இரவு பனி பொழிவு இல்லை. மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமா விளங்கியது. அதே மைதானத்தில் தான் இன்றைய எலிமினேட்டர் ஆட்டமும் நடைபெறுகிறது. நேற்றைய போட்டியின் அடிப்படையில் பார்த்தால் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தான் தேர்வு செய்யும்.

ஆனால் நேற்றைய போட்டியை வைத்து மட்டுமே முடிவு செய்ய முடியாது. அந்தந்த அணியின் பலம், பலவீனங்களை அறிந்து பேட்டிங்கா அல்லது பவுலிங்கா என்பதை தேர்வு செய்ய வேண்டும். இந்நிலையில், இரு அணிகளுக்கான வெற்றி வாய்ப்பு குறித்து பார்க்கலாம்.

மும்பை இந்தியன்ஸ்:-

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் தடுமாறி வந்தது. அதன் பிறகு எழுச்சி பெற்ற மும்பை தனது பேட்டிங்கால் பிளே ஆப் சுற்றுக்கு 4வது அணியாக அடியெடுத்து வைத்தது.

மும்பை அணி பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டு வருகிறது. பேட்டிங்கே மும்பை அணியின் மிகப்பெரிய பலம்.

200 ரன்கள் அடித்தாலும் அதை திருப்பி அடிக்கும் அளவுக்கு அவர்களிடம் பேட்டிங் உள்ளது. அந்த அணியில் ரோகித், இஷன் கிஷான், கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நேஹல் வதேரா ஆகியோர் பேட்டிங்கில் ஜொலிக்கிறார்கள்.

இதில் சூர்யகுமார் யாதவ், கேமரூன் க்ரீன் தலா 1 சதம் அடித்துள்ளனர். ஆனால் மும்பை அணியின் பந்துவீச்சு சொல்லும்படி இல்லை. பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வாலை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுகின்றனர்.

போட்டி நடைபெறும் சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் மும்பை அணியில் பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா, ஹிருத்திக் ஷோகீன் ஆகிய 3 சுழற்பந்து வீச்சாளர்கள் களம் இறங்க வாய்ப்பு உள்ளது.

மும்பை அணி தனது பேட்டிங்கை மலை போல் நம்பி இருப்பதால் டாஸ் வென்றாலும் அந்த அணி சேசிங் செய்வதை தான் விரும்பும். மும்பை பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்தே இந்த போட்டியின் முடிவு அமையும்.

மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோவுக்கு எதிரான இதுவரை வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:-

லக்னோ கேப்டனான கே.எல்.ராகுல் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் அந்த அணியை க்ருணால் பாண்ட்யா வழிநடத்தி வருகிறார். லீக் சுற்றில் அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

லக்னோ அணி பேட்டிங்கில் மிகப்பெரிய அதிரடி வீரர்களை கொண்டுள்ளது. அந்த அணியில் கைல் மேயர்ஸ், டி காக், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிகோலஸ் பூரன், க்ருணால் பாண்யா, ஆயுஷ் பதோனி என அதிரடி வீரர்கள் குவிந்துள்ளனர்.

மும்பை அணியை போல் லக்னோ அணியும் பேட்டிங்கை தான் மலை போல் நம்பி உள்ளது. பந்துவீச்சை பொறுத்தவரையில் சீனியர் வீரர்கள் இல்லாதது பின்னடைவாக கருதப்படுகிறது. யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக், மோசின் கான் உள்ளிட்ட இளம் பந்து வீச்சாளர்களே உள்ளனர்.

கொல்கத்தாவுக்கு எதிரான தனது கடைசி ஆட்டத்தில் கூட 1 ரன் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகாமாக இருக்கும் என்பதால் லக்னோவுக்கு வெற்றி வாய்ப்பு சற்று அதிகமாக உள்ளது. ஏனெனில் லக்னோ அணி தனது உள்ளூர் போட்டிகளை லக்னோவில் பாரத் ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் விளையாடியது. அந்த மைதானமும் சுழற்பந்து வீச்சுக்கு சற்று சாதகமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.

லக்னோ அணியிலும் பேட்டிங் வலுவாக இருப்பதால் இவர்களும் சேசிங் செய்வதையே விரும்புவார்கள். ஆனால் போட்டியின் முடிவு எந்த அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். மொத்தத்தில் இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

உத்தேச பிளேயிங் லெவன்:-

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா (கேப்டன்), இஷன் கிஷான் (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், திலக்வர்மா,நேஹல் வதேரா, டிம் டேவிட், கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஹிருத்திக் ஷோகீன்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கைல் மேயர்ஸ், குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), பிரேரக் மன்கட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருணால் பாண்ட்யா (கேப்டன்), நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, கிருஷ்ணப்பா கவுதம், ரவி பிஷ்னோய், மோசின் கான், யாஷ் தாக்கூர்.

Tags:    

மேலும் செய்திகள்