துலீப் கோப்பை கிரிக்கெட்: தெற்கு மண்டல அணி முன்னிலை
மேற்கு மண்டல அணி 51 ஓவர்களில் 146 ரன்னில் அடங்கியது.
பெங்களூரு,
துலீப் கோப்பை கிரிக்கெட்டில் தெற்கு -மேற்கு மண்டல அணிகள் இடையிலான இறுதிப்போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் தெற்கு மண்டல அணி 213 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய மேற்கு மண்டல அணி 2-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்திருந்தது.
3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய மேற்கு மண்டல அணி 51 ஓவர்களில் 146 ரன்னில் அடங்கியது. தெற்கு மண்டலம் தரப்பில் வித்வாத் கவீரப்பா 7 விக்கெட்டுகளை அள்ளினார். பின்னர் 67 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தெற்கு மண்டல அணி 60 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்து 248 ரன்கள் முன்னிலை பெற்று இருந்த போது போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் அத்துடன் முடித்து கொள்ளப்பட்டது. வாஷிங்டன் சுந்தர் 10 ரன்னுடனும், விஜய்குமார் வைஷாக் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெறும்.