துலீப் கோப்பை கிரிக்கெட்: முதல் இன்னிங்சில் வடக்கு மண்டல அணி 540 ரன்கள் குவித்து 'டிக்ளேர்'
வடகிழக்கு மண்டல அணி 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 65 ரன்கள் எடுத்துள்ளது.;
பெங்களூரு,
துலீப் கோப்பை கிரிக்கெட்டில் வடகிழக்கு-வடக்கு மண்டல அணிகள் இடையிலான கால்இறுதிப்போட்டி (4 நாள் ஆட்டம்) பெங்களூருவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த வடக்கு மண்டலம் தொடக்க நாளில் 6 விக்கெட்டுக்கு 306 ரன்கள் எடுத்திருந்தது. நிஷாந்த் சிந்து 76 ரன்களுடனும், புல்கித் நரங் 23 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய நரங் 46 ரன்னில் கேட்ச் ஆனார்.
பின்னர் நிஷாந்த் சிந்துவும், ஹர்ஷித் ராணாவும் கைகோர்த்து அணியை வலுவான நிலையை நோக்கி பயணிக்க வைத்தனர். இருவரும் சதம் அடித்து அசத்தினர். சிந்து 150 ரன்களில் (18 பவுண்டரி, 3 பவுண்டரி) ஆட்டமிழந்தார். வடக்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 540 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. ஹர்ஷித் ராணா 122 ரன்களுடன் (86 பந்து, 12 பவுண்டரி, 9 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வடகிழக்கு மண்டலம் 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 65 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறும்.