துலீப் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி: மேற்கு மண்டல அணிக்கு 298 ரன் இலக்கு
இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.;
பெங்களூரு,
துலீப் கோப்பை கிரிக்கெட்டில் தெற்கு-மேற்கு மண்டல அணிகள் இடையிலான இறுதிப்போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தெற்கு மண்டல அணி 213 ரன்னும், மேற்கு மண்டல அணி 146 ரன்னும் எடுத்தன. 67 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தெற்கு மண்டல அணி 3-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்திருந்தது.
4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய தெற்கு மண்டல அணி 230 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. மேற்கு மண்டலம் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் தர்மேந்திரசிங் ஜடேஜா 5 விக்கெட் வீழ்த்தினார். இதனால் மேற்கு மண்டல அணிக்கு 298 ரன்களை வெற்றி இலக்காக தெற்கு மண்டலம் நிர்ணயித்தது.
இந்த இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய மேற்கு மண்டல அணி 62.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெள்ளிச்சமின்மையால் ஆட்டம் அத்துடன் முடித்து கொள்ளப்பட்டது. பிரித்வி ஷா 7 ரன்னிலும், புஜாரா 15 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 4 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். கேப்டன் பிரியங்க் பன்சால் 92 ரன்னுடனும் (205 பந்து, 11 பவுண்டரி), அதித் சேத் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது. மேற்கு மண்டல அணியின் வெற்றிக்கு மேலும் 116 ரன்கள் தேவைப்படுகிறது. அந்த அணியின் கைவசம் 5 விக்கெட் உள்ளது.