டூபிளிஸ்சிஸ், மேக்ஸ்வெல் அதிரடி... 212 ரன்கள் குவித்தது பெங்களூரு அணி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 212 ரன்கள் குவித்தது.
பெங்களூரு,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டூபிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோதுகிறது.
இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி, கேப்டன் டூபிளிஸ்சிஸ் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். விராட் கோலி 44 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 61 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல்லும் அதிரடி காட்டினார். மறுமுனையில் டூபிளிஸ்சிஸ் 35 பந்துகளில் அரை சதம் கடந்து தனது அதிரடியை தொடர்ந்தார்.
மேக்ஸ்வெல், டூபிளிஸ்சிஸ் இருவரும் பந்துகளை பவுண்டரி, சிக்சருமாக அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் லக்னோ பந்துவீச்சாளர்கள் திணறினர். மேக்ஸ்வெல் 24 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் அரை சதம் கடந்தார். அவர் 59 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. டூபிளிஸ்சிஸ் 79 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.