பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி குறித்து அதிகம் பேச வேண்டாம் - வங்காளதேச வீரர்

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.

Update: 2024-09-11 04:10 GMT

Image Courtesy: AFP 

டாக்கா,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

இந்திய தொடருக்கு முன்னதாக வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது.

இதையடுத்து வங்காளதேச அணிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் வங்காளதேச அணியை பாராட்டியும், பாகிஸ்தானை விமர்சித்தும் ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்த வங்காளதேசம் தற்போது அதே நம்பிக்கையோடு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களம் இறங்க உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி குறித்து அதிகம் பேச வேண்டாம் என வங்காளதேச அதிரடி ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, பாகிஸ்தான் அணிக்கு எதிராக நாங்கள் சிறப்பாக விளையாடினோம். வெளிப்படையாக கூற வேண்டுமானால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை விட்டு வெளியேற ஊடகங்கள் உதவ வேண்டும். இனி பாகிஸ்தான் தொடர் குறித்து அதிகம் பேசாமல் இருப்பது நல்லது.

இந்திய அணிக்கு எதிரான தொடர் சவாலாக இருக்கும் எனவே கடந்த காலத்தை பற்றி அதிகம் பேசாமல் இருக்க வேண்டும். ஆனால் கடந்த காலத்தில் பெற்ற உத்வேகத்தை எடுத்துக்கொள்வது நம்மை தரும். நாங்கள் இந்தியாவுக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் விளையாடும் போது எப்போதுமே அது சவாலாக இருக்கும்.

இது மிகவும் சவாலான தொடர் அல்லது எளிதான தொடர் என்று நான் எதையும் கூற மாட்டேன். அவர்கள் தங்களுடைய சூழ்நிலையில் மிகவும் வலுவான அணி. எனவே இந்த தொடர் எங்களுக்கு நிச்சயம் போட்டி மிகுந்த தொடராக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்