பாகிஸ்தானை போன்று இந்தியாவும் அதனை மறந்துவிட்டார்களா..? பாசித் அலி விமர்சனம்

துபேவுக்கு பதிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஹர்திக், ஜடேஜா போன்ற ஆல் ரவுண்டர்களை கம்பீர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பாசித் அலி தெரிவித்துள்ளார்.

Update: 2024-08-06 04:10 GMT

கராச்சி,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில், 2-வது போட்டியில் இலங்கை வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

முன்னதாக இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் தடுமாறி வரும் நிலையில், ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 2 போட்டிகளிலும் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். ரோகித்தை தவிர்த்து விராட் கோலி உட்பட மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் இலங்கையின் தரமான சுழல் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்தியாவிற்கு தோல்வியை கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தானை போலவே இந்திய கிரிக்கெட் அணியும் தரமான சுழல் பந்துகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மறந்து விட்டார்களா? என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி விமர்சித்துள்ளார். அத்துடன் ஷிவம் துபேவுக்கு பதிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா போன்ற ஆல் ரவுண்டர்களை கம்பீர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "பாகிஸ்தானுக்கு பின்பு ஸ்பின்னர்களுக்கு எதிராக எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை இந்தியாவும் மறந்து விட்டதாக நான் உணர்கிறேன். ஒருவேளை அவர்கள் அதிகமாக டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதால் இப்படி இருக்கலாம். குறிப்பாக ஷிவம் துபே அவுட்டானதை பார்த்து எனக்கு ஏமாற்றம் கிடைத்தது. அவரால் சுழல் பந்துகளை தாக்குப்பிடிக்க முடியவில்லை. முதல் போட்டியில் வாஷிங்டன் சுந்தரும் கிட்டத்தட்ட அவரை போலவே அவுட்டானார். ஷிவம் துபேவை டி20 அணியில் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். ஒருநாள் அணியில் தேர்ந்தெடுக்காதீர்கள்.

அல்லது முதலில் அவரை உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் அதிகமாக விளையாட வையுங்கள். ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரவீந்திர ஜடேஜா இல்லாமல் இந்திய அணி முழுமையடையாது. இத்தொடரில் கம்பீர் தவறான பேட்டிங் கலவையை பயன்படுத்துகிறார். ஒருவேளை நீங்கள் இடது வலது கை சேர்க்கையை பயன்படுத்த விரும்பினால் அக்சர் படேலை மேலே கொண்டு வர வேண்டும். ஷிவம் துபேவுக்கு பதிலாக 2 கீப்பர்கள் இருந்தாலும் பரவாயில்லை என்று கருதி ரிஷப் பண்ட்டை விளையாட வைத்திருக்க வேண்டும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்