" நிச்சயம் எதிர்காலத்திற்கான அணி...." இலங்கையை பாராட்டிய இர்பான் பதான்

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணி கடைசி பந்தில் பாகிஸ்தானை பதம் பார்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

Update: 2023-09-15 07:15 GMT

கொழும்பு,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் சூப்பர்4 சுற்றின் முக்கியமான ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இலங்கையும், பாகிஸ்தானும் நேற்று கோதாவில் குதித்தன.

ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மழை புகுந்து விளையாடியதால் 2¼ மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

'டாஸ்' ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி அப்துல்லா ஷபிக்கும், பஹர் ஜமானும் பாகிஸ்தானின் இன்னிங்சை தொடங்கினர். போதிய ரன் எடுக்க முடியாமல் தகிடுதத்தம் போடும் பஹர் ஜமான் இந்த ஆட்டத்திலும் சோபிக்கவில்லை. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுக்கு 130 ரன்களுடன் தள்ளாடியது. இந்த நெருக்கடியான சூழலில் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானும், இப்திகர் அகமதுவும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இடையில் மழையால் மேலும் அரைமணி நேரம் ஆட்டம் தடைபட்டதால் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

தங்களை வலுவாக நிலைநிறுத்திக் கொண்ட ரிஸ்வானும், இப்திகரும் இலங்கையின் பந்து வீச்சை அடித்து நொறுக்கினர். இதனால் கடைசி கட்டத்தில் ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்கு 252 ரன்கள் சேர்த்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் 102 ரன்கள் திரட்டி அசத்தினர். 

இந்த இலக்கை  நோக்கி ஆடிய இலங்கை அணியில் குசல் பெரேரா 17 ரன்களிலும், நிசாங்கா 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு குசல் மென்டிசும், சமரவிக்ரமாவும் இணைந்து அணியை நிமிர வைத்தனர். இவர்களை அவ்வளவு எளிதில் பாகிஸ்தான் பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. ஸ்கோர் 177-ஆக உயர்ந்த போது, சமர விக்ரமா 48 ரன்களிலும், குசல் மென்டிஸ் 91 ரன்களிலும் (87 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் இப்திகர் அகமதுவின் பந்து வீச்சில் சிக்கினர். கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் சரிந்ததால் பரபரப்பு தொற்றியது.

கடைசி ஓவரில் இலங்கையின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. பரபரப்பான கடைசி ஓவரை புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ஜமன் கான் வீசினார். இதில் முதல் 4 பந்தில் 2 ரன்கள் மட்டுமே எடுத்த இலங்கை, மதுஷன்னின் (1 ரன்) விக்கெட்டை ரன்-அவுட்டில் பறிகொடுத்தது. 5-வது பந்தை அசலங்கா பவுண்டரி விரட்டினார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த 2 ரன்களை அசலங்கா எடுத்து திரில் வெற்றியை தேடித்தந்தார். இலங்கை அணி 42 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 11-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்நிலையில் இலங்கை அணியின் வெற்றியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் பாராட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ( முன்பு டுவிட்டர்) தளத்தில்,

'கடந்த இரண்டு ஆட்டங்களில் இலங்கை சிறப்பாக விளையாடியது. அவர்களிடம் பந்து வீசக்கூடிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். நீண்ட பேட்டிங் வரிசை. நிச்சயம் எதிர்காலத்திற்கான அணி' என பாராட்டி பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்