தோல்வியிலிருந்து மீண்டு நிச்சயம் இறுதிப்போட்டிக்கு வருவோம் - கம்மின்ஸ் நம்பிக்கை

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் ஐதராபாத் தோல்வியடைந்தது.

Update: 2024-05-22 08:53 GMT

image courtesy:PTI 

அகமதாபாத்,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பிளே ஆப் சுற்றின் முதலாவது ஆட்டத்தில் (குவாலிபயர் 1) புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், 2-வது இடம் பிடித்த சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா வெற்றி பெற்று நடப்பு சீசனில் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

தோல்வியடைந்த ஐதராபாத் அணிக்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது. இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் ஐதராபாத் மோதும். அதில் வெற்றி பெற்றால் அந்த இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.

நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத், கொல்கத்தா அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.3 ஓவர்களில் 159 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி வெறும் 13.4 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 164 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில், " உண்மையிலேயே எங்களுடைய முழு முயற்சியை நாங்கள் இந்த போட்டியில் கொடுத்தோம். ஆனால் இறுதியில் தோல்வியை சந்தித்ததில் வருத்தம்தான். இருந்தாலும் 2-வது குவாலிபயர் போட்டி எங்களுக்கு இருக்கிறது. அதில் வெற்றி பெற்றால் நிச்சயம் இறுதி போட்டிக்கும் முன்னேறுவோம்.

டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரு மோசமான நாள் கண்டிப்பாக எந்த அணிக்குமே இருக்கும். அந்த வகையில் இன்றைய போட்டியில் எங்களுக்கு மோசமான நாளாக அமைந்தது. பேட்டிங்கில் நாங்கள் இப்படி தடுமாறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் இதிலிருந்து நிச்சயம் மீண்டு இறுதிப்போட்டிக்கு வருவோம். கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக பந்துவீசி இருந்தார்கள். சென்னை மைதானத்தில் எங்களால் சிறப்பாக விளையாட முடியும்" என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்